மேலும் செய்திகள்
கோவையில் களைகட்டிய பொங்கலோ பொங்கல்!
11-Jan-2025
ஈச்சனாரி, கற்பகம் உயர்கல்விக் கழகத்தில், 'மகிழ் 2025' என்ற பெயரில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வளாகம் முழுவதும் வண்ண தோரணங்கள் மற்றும் காளைகள், குதிரைகள், ஆட்டுக்கிடாய்கள், சேவல் கட்டி வைக்கப்பட்டு, கிராமப்புற சூழல் ஏற்படுத்தப்பட்டிருந்தது.சிலம்பம் முதலான வீர விளையாட்டுகள், தேவராட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகளை மாணவர்கள் நிகழ்த்தினர். துறைவாரியாக 60க்கும் மேற்பட்ட குழுவினர் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். பல்கலையின் துணைவேந்தர் வெங்கடாசலபதி, பதிவாளர் ரவி, டீன்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், உற்சாகமாக பங்கேற்றனர். கே.பி.ஆர்.,கல்லுாரி
கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், பாரம்பரிய முறையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கே.பி.ஆர்., குழுமத்தின் தலைவர் ராமசாமி, தலைமை வகித்தார்.கல்லுாரி வளாகத்தில் காவடியாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மரக்காலாட்டம், தப்பாட்டம் மற்றும் சிலம்பாட்டம் ஆகிய, தமிழர் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. உறியடித்தல், கயிறு இழுத்தல், இளவட்டக்கல் துாக்குதல் போன்ற வீர விளையாட்டுகள் மற்றும் பாண்டி, பல்லாங்குழி போன்ற பழைய விளையாட்டுகளையும், மாணவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.கல்லுாரியின் செயலர் காயத்ரி, முதல்வர் சரவணன் மற்றும் ராட்சசன் திரைப்பட இயக்குனர் ராம்குமார், பேராசிரியர்கள் மற்றும் கே.பிஆர்., குழுமம் தத்தெடுத்த கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ரத்தினம் கல்லுாரி
ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 'உழவர் திருவிழா' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. துறைவாரியாக மாணவர்கள் ஒன்றிணைந்து, பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். தமிழ்நாட்டின் விவசாய மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில், அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்கள் ஊர்வலமாக அணிவகுத்தன. நாட்டு இன கால்நடைகளை காட்சிப்படுத்தியவாறே, மாவிளக்கு மற்றும் முளைப்பாரி அடங்கிய மாபெரும் அணிவகுப்பு நடந்தது.ஒயிலாட்டம், புலியாட்டம், மயில் ஆட்டம் போன்ற பாரம்பரிய நடனங்கள் நடந்தன. பொங்கல் தயாரிப்பு, முளைப்பாரி, காட்சி மற்றும் அணிவகுப்பு ஆகியவற்றிற்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில், ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதன்மை நிர்வாகி மாணிக்கம், முதல்வர் பாலசுப்ரமணியன், துணை முதல்வர் சுரேஷ் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். நைட்டிங்கேல் கல்வி குழுமம்
நைட்டிங்கேல் கல்வி குழுமங்களின் சார்பில், வீரப்பனுார் சாய் நர்சிங் கல்லுாரியில் தைத்திருநாள் பொங்கல் விழா, தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் கொண்டாடப்பட்டது.நைட்டிங்கேல் செவிலியர் மற்றும் பிசியோதெரபி கல்லுாரி, அன்னை மீனாட்சி நர்சிங் கல்லுாரி, எண்ணம் நர்சிங் மற்றும் பார்மசி கல்லுாரி, சாய் நர்சிங் கல்லுாரிகளின் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். கும்மி, கோலாட்டம், உறியடித்தல், நடனம், பாடல் போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளை மாணவர்கள் அரங்கேற்றினர். மலையாள திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ஜோஸ், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகளை வழங்கி கவுரவித்தார். நைட்டிங்கேல் கல்விக் குழுமங்களின் நிர்வாகிகள் மனோகரன், பிரேமலதா, ராஜிவ், சஞ்சய் மணி மற்றும் கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி
கோவைப்புதுார் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவிற்கு, பள்ளியின் தலைவர் தேவந்திரன் மற்றும் கவுரி ஆகியோர் தலைமை வகித்தனர்.கரும்பு மற்றும் மா தோரணம் கட்டி, வண்ண கோலமிட்டு, மாட்டு வண்டிகளுடன் பள்ளி வளாகமே குட்டி கிராமமாக காட்சியளித்தது. பள்ளியில் அமைக்கப்பட்ட ராட்டினம், ஊஞ்சலில் மாணவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். பல்வேறு பாரம்பரிய கலைநிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன. ஆசிரியர்கள், மாணவர்கள் நடனமாடி, மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.பள்ளியின் செயலர் ரவிக்குமார், நிர்வாகி உதயேந்திரன், வித்யாஸ்ரம் பள்ளி நிர்வாக இயக்குனர் சவுந்தர்யா, ஆஸ்ரம் பள்ளி முதல்வர் சரண்யா மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
11-Jan-2025