அஞ்சல் ஊழியரின் பணி நிறைவு விழா
வால்பாறை; வால்பாறை அஞ்சலகத்தில் பல்நோக்கு பணியாளராக பணிபுரிந்தவர் கணேசன். இவர் கடந்த, 42 ஆண்டுகளாக வால்பாறை மலைப்பகுதியிலேயே பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும், வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதியிலும் பணிபுரிந்துள்ளார்.பணி ஓய்வு பெறும் நிலையில், பிரிவு உபச்சார விழாவிற்கு, ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்டோருக்கு, 50 பைசா அஞ்சல் அட்டை வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார்.இந்நிலையில், வால்பாறை அஞ்சலகத்தில் நடந்த பணி நிறைவு விழாவுக்கு, போஸ்ட் மாஸ்டர் கீதாஞ்சலி தலைமை வகித்தார். அஞ்சலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சார்பில், பணி நிறைவு பெற்ற கணேசனுக்கு, பொள்ளாச்சி கோட்ட உதவி அஞ்சலக கண்காணிப்பளர் சத்தியராஜூ நினைவு பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.விழாவில், பொள்ளாச்சி உதவி கோட்ட அஞ்சலக அதிகாரி அசோக்குமார், அஞ்சலக காப்பீட்டு அதிகாரி கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.