உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மீண்டும் தலைதுாக்கும் போஸ்டர் கலாசாரம்; கடிவாளம் போடுமா மாநகராட்சி

மீண்டும் தலைதுாக்கும் போஸ்டர் கலாசாரம்; கடிவாளம் போடுமா மாநகராட்சி

கோவை; கோவை நகர்ப்பகுதியில் மேம்பால சுவர்கள், அரசு அலுவலக சுவர்கள், தனியார் நிறுவன சுவர்கள் என, இஷ்டத்துக்கு எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் சார்பிலும், தனி நபர் துதிபாடும் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. இது, வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கிறது. இதற்கு முன் இவ்வாறு அதிகளவில், சுவர்களை போஸ்டர் நாறடித்தபோது, மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுத்தது. காந்திபுரம் மேம்பாலத் துாண்களில் பெயின்ட் பூசி, ஓவியங்கள் வரையப்பட்டன. உப்பிலிபாளையம் பழைய மேம்பால பக்கவாட்டுச் சுவர்கள் மற்றும் துாண்களில் ஓவியங்கள் வரையப்பட்டன. அதனால், போஸ்டர் ஒட்டுவது தவிர்க்கப்பட்டது. சமீபமாக, போஸ்டர் ஒட்டும் கலாசாரம் மீண்டும் தலைதுாக்கியுள்ளது. அவிநாசி ரோட்டில் கட்டப்படும் புதிய மேம்பாலத்தின் ஏறு தளங்கள் மற்றும் இறங்கு தளங்களின் துாண்கள் மற்றும் பக்கவாட்டுச் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளன. இவை தவிர, நகர் முழுவதும் தனியார் சுவர்களில் இஷ்டத்துக்கு, நகரின் அழகை கெடுக்கும் வகையில் ஒட்டப்படுகின்றன. இதேபோல், அரசு அலுவலக சுவர்களில் அரசியல் கட்சியினர் வாசகங்கள் எழுதுவது இன்றும் தொடர் கதையாக உள்ளது. கட்சி தலைவர்கள் வரும்பொழுது, அவர்கள் வரும் வழித்தடங்களில் போஸ்டர் ஒட்டி, நகரின் அழகையே கெடுக்கின்றனர். சாலையின் மையத்திட்டுகள், தடுப்புகள், பாலங்கள் உள்ளிட்டவற்றில் விளம்பரங்கள் எழுதுவது, போஸ்டர்கள் ஒட்டவோ கூடாது; போஸ்டர்கள் ஒட்டினால் அபராத நடவடிக்கையுடன், குற்றவியல் நடவடிக்கை பாயும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்திருந்தது. எச்சரித்தது போல் நடவடிக்கை எடுக்காததால், அலட்சியமும், விதிமீறல்களும் அதிகரித்துள்ளன. இதேபோல், கே.ஜி. மருத்துவமனை ரோடு, நஞ்சப்பா ரோடு, காமராஜர் ரோடு, சோமசுந்தரா மில்ஸ் ரோடு மற்றும் மாநகரின் முக்கிய இடங்களில், வணிக நோக்கத்தில் விளம்பர போஸ்டர்கள், விளம்பர பலகைகள் வைப்பதுடன், சுவரில் வாசகங்களும் எழுதுகின்றனர். பொது சொத்தை சேதப்படுத்துவதுடன், மாநகரின் அழகையும் கெடுக்கும் நிறுவனங்கள் மீது, பாரபட்சமின்றி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை