உருளைக்கிழங்கு விலை கடும் சரிவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கேத்தி, கூடலூர் என பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு ஏலம் விடப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.தற்போது வரத்து அதிகரித்துள்ளதால், விலை சரிந்து, குறைந்த விலைக்கு விற்பனையாகி வருகிறது. உருளைக்கிழங்கு வியாபாரிகள் கூறுகையில், 'ஊட்டி உருளைக்கிழங்கு, கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.2,260 வரை மட்டுமே விற்பனை ஆகி உள்ளது. தினமும் 1,000 முதல் 1,500 மூட்டைகள் வரை, வரத்து உள்ளது. மாலத்தீவு, இலங்கை நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும். அப்போது தான் வரத்து அதிகரித்தாலும், விலை குறையாது. ஊட்டி உருளைக்கிழங்கு இன்று அதிகபட்சமாக, 2,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 1,500 மூட்டைகள் விற்பனைக்கு வந்தன' என்றனர்.