சர்க்கார்பதியில் மின் உற்பத்தி; திருமூர்த்தி அணைக்கு நீர் திறப்பு
பொள்ளாச்சி; பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் வினியோகிக்கும் வகையில், சர்க்கார்பதியில் மின் உற்பத்தி செய்து, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது.மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையால், பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகள் முழு கொள்ளளவும் நிரம்பின. இதையடுத்து, இரண்டாம் மண்டல பாசனத்துக்கு ஐந்து சுற்று தண்ணீர் வழங்கப்பட்டது. கடந்த, 6ம் தேதியுடன் தண்ணீர் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு வரும், 29ம் தேதி தண்ணீர் திறக்க அரசுக்கு திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு வலியுறுத்தியது. அதன்படி, கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று முதல், பரம்பிக்குளம் அணையில் இருந்து துாணக்கடவு, பெருவாரிப்பள்ளம் வழியாக சர்க்கார்பதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. சர்க்கார்பதியில் மின் உற்பத்தி துவங்கப்பட்டு, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சர்க்கார்பதி நீர் மின் உற்பத்தி நிலையத்தில், வினாடிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்பட்டு, 12 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நீர்திறப்பு அளவை படிப்படியாக அதிகரித்து, மின் உற்பத்தியும் அதிகரிக்கப்படும்.இங்கிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக கொண்டு செல்லப்படும் தண்ணீர், திருமூர்த்தி அணையில் இருப்பு வைத்து, பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்துக்கு வினியோகிக்கப்படும்.இவ்வாறு, கூறினர்.