வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டம் செயல்படுத்த முன்னேற்பாடு
-- நமது நிருபர் -வீடு தேடி ரேஷன் பொருடகள் வழங்கும் திட்டத்துக்கான முன்னேற்பாடுகளை கூட்டுறவு துறை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் 2.25 கோடி ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. ரேஷன் கடைகளுக்குச் சென்று கைவிரல் ரேகை அல்லது கண்விழி ரேகை பதிவு செய்த பின் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. தற்போது கடைகளுக்கு நேரில் சென்று பொருட்கள் வாங்க முடியாதவர்களுக்கு, நேரடியாக வீட்டில் சென்று பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 1 முதல் 5ம் தேதி வரை சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சில இடங்களில் இதற்கான சோதனை முயற்சி நடந்தது. பிற மாவட்டங்களிலும் சோதனை முயற்சி கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக தற்போது 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு இம்முறையில் பொருள் வழங்கப்படவுள்ளது. ''நகர்ப்புற பகுதிகளில் 70; கிராமப் பகுதியில் 60; மலைப்பகுதியில் 50 ரேஷன் கார்டுகள் தகுதியானவையாக இருந்தால், ஒரே நாளில், தகுதியான அனைவருக்கும் பொருட்கள் வழங்க வேண்டும். முதல் நாளில் 70 அல்லது 60 பேருக்கு வழங்க வேண்டும். இரண்டாவது நாளும் அட்டை இருந்தால் தனி வாகனத்தில் கொண்டு செல்ல வேண்டும்'' உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும் 7ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அல்லது 15ம் தேதி சுதந்திர தினத்தில் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் எனத் தெரிகிறது. கூடுதல் பணிச்சுமை கூட்டுறவுச் சங்கம், ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது: கூட்டுறவு சங்கங்கள் ஏற்கனவே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. ரேஷன் கடை நடத்துவதற்கான மானியம் பெறுவதற்குள் படாதபாடு படவேண்டியுள்ளது. பெரும்பாலான ரேஷன் ஊழியர்கள் பெண்கள் தான். இத்திட்டப் பயனாளிகளை தேடி ஒரே நாளில் பொருட்கள் எடுத்துச் சென்று வழங்க வேண்டும். இதற்கான வாகன வாடகை, சுமை தொழிலாளி கூலி ஆகியன ஆயிரக்கணக்கில் வரும். வாகனத்தில் பெண் ஊழியர்கள் ஏறி இறங்கி பொருட்கள் வழங்குவது, ரேகை பதிவு செய்வது போன்ற நடைமுறைச் சிக்கல்களும் உள்ளன. ஒரு நாளில் 10 பேர் வரை தான் வழங்க முடியும். 60 அல்லது 70 பேர் என்பது இயலாதது. தற்போதுள்ள பணிப்பளுவில் மேலும் இது ஊழியர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுத்தும். இவ்வாறு, தெரிவித்தனர்.