பிரதமரின் புதிய பி.எப். திட்டத்துக்கு தொழில் நிறுவனங்களிடம் வரவேற்பு கோவை மண்டல பி.எப்.கமிஷனர் பெருமிதம்
கோவை: ''பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா (PMVBRY) திட்டம் அறிமுகமான, நான்கு மாதங்களில் 1,649 நிறுவனங்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளன,'' என, கோவை மண்டல பி.எப்.கமிஷனர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். தனியார் துறையில் புதிய வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக மத்திய அரசு, 'பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா' என்ற புதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்துக்கு என, 92 ஆயிரத்து 446 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில், தனியார் துறையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில், 3.50 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என, கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் கூறியதாவது: புதிய திட்டத்தின்படி, ஆக.1ம் தேதி முதல் 2027ம் ஆண்டு ஜூலை வரை, பி.எப். அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்தில், முதல் முறையாக வேலைக்கு சேரும் ஒரு தொழிலாளிக்கு, அவரது ஒரு மாத ஊதியத்துக்கு சமமான ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை அதிகபட்சம், 15 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு, இரண்டு தவணைகளாக வழங்கப்படும். வேலை கொடுக்கும் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு, மாதந்தோறும் 3000 ரூபாய் இரண்டு ஆண்டுகள் வரையும், உற்பத்தி துறையில் உள்ளவர்களுக்கு நான்கு ஆண்டுகள் வரையும், இந்த மானியத் தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு, தொழிலாளர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திட்டம் அறிமுகமான நான்கு மாதங்களில், கோவை மண்டலத்தில் மட்டும், 1,649 நிறுவனங்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளன. 11ஆயிரத்து 58 புதிய பணியாளர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். 21 ஆயிரத்து 570 தொழிலாளர்கள் மீண்டும் பணியில் சேர்ந்து பலனடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களை, தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு விளக்குவதற்காக, கோவை மண்டல பி.எப். அலுவலகம் சார்பில், இதுவரை சைமா (SIMA), ஹியூமன் ரிசோர்ஸ் பிரட்டர்னிட்டி அசோசியேஷன், கொடிசியா, சிட்கோ மற்றும் கே.பி.ஆர். மில்ஸ் ஆகிய இடங்களில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. தொழில்துறை மையங்களில் வாரந்தோறும், கருத்தரங்குகள் நடத்துவதற்கான திட்டம், மண்டல அலுவலகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் நன்மைகளை முதலாளிகளுக்கு விளக்குவதற்காக, இணையவழி கருத்தரங்குகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார். திட்டம் அறிமுகமான நான்கு மாதங்களில், கோவை மண்டலத்தில் மட்டும், 1,649 நிறுவனங்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளன. 11ஆயிரத்து 58 புதிய பணியாளர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். 21 ஆயிரத்து 570 தொழிலாளர்கள் மீண்டும் பணியில் சேர்ந்து பலனடைந்துள்ளனர்.