மருத்துவ உபகரணங்களின்றி தனியார் ஆம்புலன்ஸ் இயக்கம்; முறைபடுத்த எதிர்பார்ப்பு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில் இயக்கப்படும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களை முறைபடுத்த மருத்துவ பணிகள் மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவசர சிகிச்சை மற்றும் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, ஆம்புலன்ஸ் வாகனங்கள், அதிவேகமாக இயக்கப்படுகின்றன. குறிப்பாக, பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், விபத்து குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால், '108' ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு நிகராக, தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களும் போட்டி போட்டு, சம்பவ இடத்துக்கு விரைகின்றன.நோயாளிகளை தனியார் மருத்துவமனை அழைத்து செல்லவே முனைப்பு காட்டுகின்றனர். ஆனால், பெரும்பாலான வாகனங்களில், அவசர மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் இருப்பதில்லை. அவ்வாறு, உபகரணங்கள் இருந்தாலும், செயலிழந்து, பயன்பாடின்றி காணப்படுகின்றன.இதனால், சில நேரங்களில், உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முடிவதில்லை. இதை தவிர்க்க, வட்டார போக்குவரத்து துறையினருடன் ஒருங்கிணைந்து, தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களை முறைபடுத்த மருத்துவ பணிகள் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தன்னார்வலர்கள் கூறுகையில், 'தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களில் உயிர்காக்கும் கருவிகள், அத்தியாவசிய மருந்து பொருட்கள் என, அடிப்படை கட்டமைப்பு இருப்பதை, மருத்துவ பணிகள் துறையினர் உறுதி செய்ய வேண்டும்.இதேபோல, வட்டார போக்குவரத்து துறையினர், வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கிய விபரங்களைக் கண்காணிக்க வேண்டும்,' என்றனர்.