உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விளையாட்டு விடுதி கட்டுவதில் சிக்கல்; கட்டுமான பொருட்கள் அகற்ற உத்தரவு

விளையாட்டு விடுதி கட்டுவதில் சிக்கல்; கட்டுமான பொருட்கள் அகற்ற உத்தரவு

கோவை; கோவையில், விளையாட்டு வீரர்களுக்கு விடுதி கட்டுவதற்கு தேர்வு செய்துள்ள இடத்தில், கட்டுமான பொருட்கள் இருப்பதால், இரு வாரங்களாகியும் பணிகள் இன்னும் துவங்கவில்லை. அவற்றை ஒரு மாதத்துக்குள் அகற்ற, ஒப்பந்த நிறுவனத்துக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. கோவை மாநகராட்சி கூடைப்பந்து மைதானம் அருகே சர்க்கஸ் மைதானம் உள்ளது. இவ்விடம், காந்திபுரம் நஞ்சப்பா ரோடு மேம்பாலம் கட்டியபோது, கட்டுமான நிறுவனத்தின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது. அப்பணி முடிந்ததும், மாநகராட்சி பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. மாதந்தோறும், 50 ஆயிரம் ரூபாய் வாடகை வசூலிக்கப்படுகிறது. இச்சூழலில், நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி மேற்கொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கு தங்கும் விடுதி கட்ட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதையேற்று, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் விடுதி கட்டுவதற்கு அவ்விடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. 89 சென்ட் பரப்பளவில் ரூ.7.95 கோடியில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. கடந்த, 11ம் தேதி பூமி பூஜை போடப்பட்டது. அப்போது, மைதானத்தின் ஒரு பகுதியை சுத்தம் செய்து, பூஜை போடப்பட்டது. அவ்விடம் தற்போது மாநகராட்சி ஒப்பந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இரு வாரங்களாகியும் விடுதி கட்டுமானப் பணி இன்னும் துவக்கப்படவில்லை. ஜல்லி, எம் சாண்ட், கான்கிரீட் கலவை பிளான்ட் அமைக்கப்பட்டு இருக்கிறது. அவற்றை அகற்றிக் கொடுத்தால் மட்டுமே விடுதி கட்டுமானப் பணியை துவக்க முடியும். 18 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால், இதுதொடர்பாக, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் இருந்து, மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, ஒரு மாதத்துக்குள் கட்டுமானப் பொருட்களை அகற்றி, அவ்விடத்தை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வசம் ஒப்படைக்க, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளார். தற்போது ஒப்பந்த நிறுவனத்துக்கு மாநகராட்சியில் இருந்து மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது; கட்டுமானப் பொருட்களை விரைந்து எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை