உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் திட்ட நிறுவனத்துக்கு கூடுதல் நிதி வழங்க கருத்துரு

குடிநீர் திட்ட நிறுவனத்துக்கு கூடுதல் நிதி வழங்க கருத்துரு

கோவை : கோவை மாநகராட்சியில், 24 மணி நேர குடிநீர் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்துக்கு கூடுதலாக ரூ.182.56 கோடி வழங்க, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.கோவை பழைய மாநகராட்சிக்கு உட்பட்ட, 60 வார்டுகளில், 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்துடன், 25 ஆண்டுகளுக்கு மாநகராட்சி ஒப்பந்தம் செய்திருக்கிறது. கட்டுமான பணிக்காக மட்டும் ரூ.646.71 கோடி, 25 ஆண்டுகள் இயக்கி, பராமரிப்பு செய்வதற்கு ரூ.2,328.45 கோடி சேர்த்து, ரூ.2,975.16 கோடிக்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியது.அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இன்னும் இத்திட்ட பணி முழுமையாக முடியாததால், ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் கடுங்கோபத்தில் இருக்கின்றனர். குழாய் பதிக்கும் பணியை இன்னும் முழுமையாக முடிக்காததால், நிதி ஒதுக்கியும் ரோடு போட முடியாமல், மாநகராட்சி நிர்வாகம் தவித்து வருகிறது. இச்சூழலில் அந்நிறுவனத்துக்கு ரூ.150 கோடி விடுவிக்க, தமிழக அரசுக்கு மாநகராட்சி பரிந்துரைத்து கடிதம் அனுப்பியுள்ளது.இதுதவிர, கட்டுமான பணிக்கான செலவுத் தொகையில் ஜி.எஸ்.டி., மற்றும் ரயில்வே, தேசிய மற்றும் நெடுஞ்சாலைத்துறை ரோடுகளில் குழாய் பதிக்க ஏற்பட்ட கூடுதல் செலவினங்களுக்கு திருத்திய நிர்வாக அனுமதி கோரியும் மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வகையில், ஜி.எஸ்.டி., ரூ.109.94 கோடி, குழாய் பதிக்க அனுமதி பெறுவதற்கு ரயில்வேக்கு ரூ.1.81 கோடி, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.35.31 கோடி, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.35.50 கோடி சேர்த்து, 829.27 கோடி ரூபாய் திருத்திய மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.646.71 கோடிக்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக தேவைப்படுவதாக ரூ.182.56 கோடியை தமிழக அரசு மானியமாக வழங்கி, நிர்வாக ஒப்புதல் தர வேண்டுமென மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, கருத்துரு அனுப்பப்பட்டிருக்கிறது. இத்தீர்மானம் தொடர்பாக, கம்யூ., கவுன்சிலர்கள் கூட கேள்வி எழுப்பவில்லை; சந்தேகம் கேட்க வில்லை என்பதே ஆச்சரியமான விஷயம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை