அமராவதி ஆலையை திறக்க வலியுறுத்தி போராட்டம்
உடுமலை : உடுமலை அருகேயுள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி, கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், வரும் 5ம் தேதி போராட்டம் நடக்கிறது.உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில், தமிழகத்தின் முதல் பொதுத்துறை நிறுவனமாக, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது.கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர்.சர்க்கரை ஆலை நிறுவி, 60 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், கரும்பு அரவை திறன் குறைந்து, இயந்திரங்கள் பழுதடைந்தன. இரு ஆண்டுகளாக ஆலை மூடப்பட்டுள்ளது.ஆலை இயங்காததால், விவசாயிகள், தொழிலாளர்கள் என பல ஆயிரக்கணக்கானவர்கள் பாதித்து வருகின்றனர். ஆலையை நவீனப்படுத்த, நிதி ஒதுக்க வேண்டும், என பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், ஆலையை நவீனப்படுத்த நிதி ஒதுக்க வலியுறுத்தி, கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வீரப்பன் கூறுகையில்,'' அமராவதி சர்க்கரை ஆலையை நவீனப்படுத்த உடனடியாக தமிழக அரசு நிதி ஒதுக்கவும், உடனடியாக பணி மேற்கொண்டு, நடப்பாண்டு கரும்பு பதிவு மற்றும் அரவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வரும், 5ம் தேதி, மடத்துக்குளத்தில் மூன்று மாவட்ட விவசாயிகள் பங்கேற்கும், தர்ணா போராட்டம் நடக்கிறது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும்,'' என்றார்.இப்பிரச்னையில், தமிழக முதல்வர் தலையிட்டு, உடனடியாக உரிய தீர்வு காண வேண்டும் என கரும்பு விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.