போக்குவரத்து நெரிசலால் அதிருப்தி: தீர்வு காணாவிட்டால் போராட்டம்
அன்னுார்: அன்னுார் வடக்கு ஒன்றிய பா.ஜ., மையக்குழு கூட்டம் நடந்தது. அன்னுார் பகுதியில், தினமும் காலை முதல் இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி, கல்லுாரி மற்றும் பணிக்கு செல்வோர் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும். சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என, சட்டசபை மானிய கோரிக்கையில் பதிவுத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு இன்னும் நடைமுறைக்கு வராமல் உள்ளது. தமிழக அரசு உடனடியாக இதை அமல்படுத்த வேண்டும். பெண்களுக்கு டவுன் பஸ் மற்றும் புறநகர் பஸ்களில் இலவச பயண அனுமதி அளித்ததை போல், ஆண்களுக்கும் இலவச பயண அனுமதி அளிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய தலைவர் ஆனந்தன், வக்கீல் பிரிவு கோவை வடக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார், ஒன்றிய பொது செயலாளர் தங்கராஜ், பொருளாளர் அசோக் உட்பட பலர் பங்கேற்றனர்.