ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த விவகாரம் பேச்சுவார்த்தையால் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
அன்னூர்: சில குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கிய விவகாரத்தில், அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது. வடக்கலூரில் காதல் திருமணம் செய்த, சில குடும்பங்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, ஒரு தரப்பினர் கலெக்டர் மற்றும் முதல்வருக்கு புகார் மனு அனுப்பினர். கோவை வடக்கு ஆர்.டி.ஓ., தலைமையில், இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் அமுல்படுத்தப்படவில்லை என்று கூறி, இந்திய கம்யூ., சார்பில் டிச. 9ம் தேதி, அன்னூர் கைகாட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று அன்னூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் யமுனா தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், 'ஆர்.டி.ஓ., அளித்த உறுதிமொழி நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. கோயில் திருவிழாவில் ஒரு தரப்பினர் ஒதுக்கப்படுகின்றனர்' என புகார் தெரிவிக்கப்பட்டது. 'வருகிற 19ம் தேதிக்குள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என வருவாய்த் துறையினர் உறுதி அளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் அறிவித்த தரப்பினர் ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைப்பதாக தெரிவித்து கலைந்து சென்றனர்.