| ADDED : பிப் 14, 2024 10:59 PM
ஆனைமலை, - 'கோ கோ சாகுபடியில், தரமான நாற்றுகள் வழங்குவதுடன், தொழில்நுட்பங்களை கற்றுத்தர வேண்டும்,' என, ஆனைமலையில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்ததினர்.ஆனைமலை 'தி கேம்ப்கோ' நிறுவனம் சார்பில் விவசாயிகள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி, ஆனைமலை கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடந்தது.நிறுவன தலைவர் கிேஷார்குமார் கோட்க்கி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் பேசினார்.தாராபுரம் கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன், ஆனைமலை கிளை மேலாளர் கணேஷ் கவுடா மற்றும் பலர் பங்கேற்றனர்.தேனரசு ஆர்கானிக் பார்ம்ஸ் தென்னை நாற்றுப்பண்ணை நிர்வாகி ராஜா கூறியதாவது:கோ கோ சாகுபடி செய்ய தரமான நாற்றுகளை வழங்க வேண்டும். நடவு முதல் உற்பத்தி வரை தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கற்றுத்தர வேண்டும். அறுவடை செய்த பின், பதப்படுத்துதலுக்கான உதவியை செய்ய வேண்டும்.மேலும், கோகோ காய்ப்புத்திறன் அதிகம் உள்ள, அக்., முதல் டிச., மாதம் வரையில் மழைப்பொழிவு இருக்கும். அறுவடை செய்த காய்களை தாராபுரத்தில் உலர்த்துவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.விவசாயிகளுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதுடன், மார்க்கெட்டிங்கிற்கான வசதிகளை செய்து தர வேண்டும். உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களை கற்றுத்தர வேண்டும்.தற்போது, விலையில்லாததால், 70 சதவீதம் விவசாயிகள், கோ கோ மரங்களை அகற்றி விட்டனர். எனவே, இந்த நிலை மாற தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.பெண் விவசாயி சிவபிரியா, விவசாயிகள் கோரிக்கை குறித்து பேசினார். இதில், விவசாயிகள், அதிகாரிகள் பங்கேற்றனர்.