பயிர் பாதுகாப்புக்கு சூடோமோனாஸ்; முன்னோடி விவசாயிகள் அறிவுரை
பெ.நா.பாளையம்; உயிர் பூஞ்சான கொல்லியான சூடோமோனாஸ் பிளாரசன்ஸ் இயற்கை விவசாயத்தில் பயிர் வளர்ச்சிக்கு முக்கிய அங்கமாக திகழ்கிறது என, முன்னோடி விவசாயிகள் கூறினர்.இயற்கை விவசாயத்தில் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறது. இது ஒரு உயிர் பூஞ்சான கொல்லியாகும். இது பயிர்களில் நோயை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சானங்களை கட்டுப்படுத்தி, நோய் பரவாமல் தடுக்கிறது. சூடோமோனாஸ் பிளாரசன்ஸை எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். பயிர்களில் காணப்படும் இலைப்புள்ளி, இலை கருகல், வாடல் மற்றும் குலை நோய் உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்துகிறது.சூடாமோனாசை பயன்படுத்துவதால், பயிர்களில் ஏற்படும் பருவ கால நோய்களை கட்டுப்படுத்தலாம். பயிர்களுக்கு தேவையான வளர்ச்சி ஊக்கியாக செயல்பட்டு, அதிகளவில் ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கிறது.பயிர்களின் வேர்களை தாக்கும் நுாற்புழுக்களையும் கட்டுப்படுத்துகிறது. தரமான விதைகளை தேர்வு செய்து, நேர்த்தி செய்யும் போது ஒரு கிலோ விதைக்கு, 10 கிராம் சூடோமோனாசை லேசாக தண்ணீர் தெளித்து, கலந்து, அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி பயன்படுத்த வேண்டும்.வளர்ந்த பயிர்களுக்கு, ஒரு கிலோ சூடோமோனஸை, 100 லிட்டர் தண்ணீரில் கலந்து இலை வழியாக காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்கும்போது இலை புள்ளி, இலை கருகல், குலை நோய் போன்ற நோய்களை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என, முன்னோடி விவசாயிகள் குறிப்பிட்டனர்.