குளக்கரையை அகலப்படுத்தபொது மக்கள் கோரிக்கை
மேட்டுப்பாளையம், : பெள்ளாதி குளக்கரையை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை மாவட்டம் காரமடை அடுத்த பெள்ளாதி ஊராட்சியில், 100 ஏக்கர் பரப்பளவில், பெரிய குளம் உள்ளது. காரமடை சுற்றுப்பகுதிகளில் பெய்யும் மழை நீரும், ஏழு எருமை பள்ளத்தில் வரும் மழை நீரும், குளத்திற்கு நீர் ஆதாரமாக உள்ளது.ஒரு முறை இக்குளம் நிரம்பினால், ஆறு மாதங்களுக்கு தண்ணீர் இருக்கும். அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில், இக்குளம் சேர்க்கப்பட்டு உள்ளதால், இக்குளத்தில் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும். இந்த குளத்தை சுற்றி இரண்டு கி.மீட்டர் சுற்றளவில் உள்ள விவசாய கிணறுகள், போர்வெல்களுக்கு நீர் ஊற்று கிடைத்து வருகிறது.இக்குளத்தின் கரை, ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திலும், 20 அடி அகலத்திலும் அமைந்துள்ளது. குளத்துப்பாளையம், பெள்ளாதி, மொங்கம்பாளையம் உள்ளிட்ட சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள், இந்த கரையின் வழியாக சென்று வருகின்றனர். பெரிய வாகனங்கள் செல்லும் வகையில், கரை அகலமாக இருந்தது. அடுத்தடுத்து பெய்த மழையால், கரையின் இரு பக்கம் செடிகளும், மரங்களும் அதிக அளவில் வளர்ந்து, புதர் போல் உள்ளன. அதனால் ஒரு வாகனம் மட்டும் செல்லும் அளவில், தற்போது பாதை உள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: பெள்ளாதி குளத்தின் கரை வழியாக, வெளியூர் வேலைக்குச் செல்லும் நபர்களும், குழந்தைகளை பள்ளிகளில் விடுவதற்கு பெற்றோர்களும், இரு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். குளத்தின் கரையில், ஏராளமான செடிகளும், மரங்களும், புதர் போல் வளர்ந்துள்ளன. அதனால் கரையில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன. உடனடியாக கரையில் வளர்ந்துள்ள செடிகளையும், மரங்களையும் வெட்டி அகற்றி, குளத்தின் கரையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.