மேலும் செய்திகள்
மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவி பெறலாம்
13-Mar-2025
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே மக்கள் தொடர்பு முகாமுக்கு வந்த கலெக்டர் பவன் குமார், முகாம் முடிந்தவுடன், திடீர் ஆய்வுக்கு கிளம்பியதால், அதிகாரிகள் அனைவரும் அவரை பின்தொடர்ந்தனர். இதனால் அதிகாரிகளை சந்தித்து, மனு அளிக்க வந்த பொதுமக்கள் பலர், மனு கொடுக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருடம்பாளையம் ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.இதில், மாவட்ட நிர்வாகத்தில் உள்ள பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று, அதற்கான தீர்வுகளை உடனடியாக மேற்கொள்வதே இம்முகாமின் நோக்கம். இதற்காக தனியார் மண்டபத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில், கோரிக்கை மனுக்களை அளிக்க வரும் பொதுமக்கள், அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் சென்று, கோரிக்கை தொடர்பான விபரங்களை தெரிவித்து, அதற்குரிய 'டோக்கன்'களை பெற்றுக் கொள்ள வேண்டும்.பின்னர், டோக்கனுடன் வருவாய் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் துறை, வேளாண் துறை, கால்நடை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்து, தங்களுடைய மனுக்களை அளிக்க வேண்டும். காலை, 10:30 முதல் மதியம், 2:00 மணி வரை மக்கள் தொடர்பு முகாம் நடப்பது வழக்கம். நேற்றுக் காலை மக்கள் தொடர்பு முகாம் நடக்கும் திருமண மண்டபத்திற்கு கலெக்டர் பவன் குமார் வந்தார். பின்னர், அங்கு பல்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். கண்காட்சி அமைக்கப்பட்டுள்ள துறைகளின் சார்பில், பொது மக்களுக்கு வழங்கி வரும் பல்வேறு நல பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், விழா மேடைக்கு வந்து பேசிய பின்னர், நிகழ்ச்சி முடிவில், பொதுமக்களிடமிருந்து, சுமார் அரை மணி நேரம் நின்று, மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற கலெக்டர் பவன்குமார், நேரடியாக கோவை செல்லாமல், திடீர் ஆய்வு பணிக்கு செல்வதாக தகவல் கசிந்தது. இதையடுத்து, மக்கள் தொடர்பு முகாமில் இருந்த பல்வேறு துறை அதிகாரிகள் பலர், தங்களுடைய பணிகளை அப்படியே போட்டுவிட்டு, கலெக்டருடன் புறப்பட்டு சென்று விட்டனர். இதனால் அதிகாரிகளை நேரில் சந்தித்து, மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏராளமானோர், மனு அளிக்க முடியாமல் தவித்தனர். பின்னர், அவர்கள் தங்கள் டோக்கன் பதிவு செய்த இடத்தில் இருந்த நபர்களிடம், தங்கள் மனுக்களை அளித்துவிட்டு ஏமாற்றத்துடன் கிளம்பி சென்றனர்.இது குறித்து கோரிக்கை மனு கொடுக்க வந்த பொதுமக்கள் கூறுகையில், 'மக்கள் தொடர்பு முகாமில் அதிகாரிகளை சந்தித்து பிரச்னைகளை விளக்கி மனு கொடுக்கலாம் என்று இருந்தோம். ஆனால் கலெக்டர் சென்றவுடன் அவர் பின்னாலேயே எல்லா அதிகாரிகளும் சென்று விட்டனர். இந்த மக்கள் தொடர்பு முகாம்கள் கண்துடைப்புக்காகத் தான் நடத்தப்படுகிறது என்பது இதன் வாயிலாக தெளிவாகிறது' என்றனர்.
13-Mar-2025