காரமடை ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமை விழா
மேட்டுப்பாளையம்: காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை விழா, நேற்று நடந்தது.அதிகாலை, 3:15 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்பு மூலவர் ரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 4:00 மணிக்கு உற்சவர் ரங்க நாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில், கோவில் வளாகத்தின் உள்ளே உலா வந்து, கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.புரட்டாசி மாத மூன்றாவது வாரம் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை வழிபட்டனர்.இந்த கோவிலில் பக்தர்கள் தங்கள் கொண்டு வந்த அரிசி, பருப்பு, காய்கறி ஆகியவற்றை கோவிலின் வெளியே இருந்த, நூற்றுக்கணக்கான தாசர்களுக்கு, படையல் இட்டனர்.அவர்கள் சங்கு ஊதியும், சேகண்டி அடித்தும் பூஜை செய்தனர். பின்பு, தாசர்கள் வழங்கிய, அரிசி, பருப்பு, காய்கறியை வாங்கிச் சென்றனர்.வரும் 12ம் தேதி நான்காம் சனிக்கிழமை விழாவும், சரஸ்வதி பூஜையும், 13ம் தேதி விஜயதசமியும், குதிரை வாகனத்தில் ரங்கநாதப் பெருமாள் எழுந்தருளி, அம்பு போடும் விழாவும், 19ம் தேதி புரட்டாசி ஐந்தாம் சனிக்கிழமை விழாவும் நடைபெற உள்ளது.