ரயில்வே கேட் மின்சாரம் வாயிலாக இயக்கம்! மேனுவல் முறையில் இருந்து மாற்றம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் ரயில்வே கேட், மின்சாரம் வாயிலாக இயங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள், கேட் கடந்து செல்லும் நேரத்தை சேமிக்க முடியும், என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் ரயில்வே கேட், பாலக்காடு ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்டது. இவ்வழியாக ரயில்கள் வரும் போது, 'சிக்னல்' கொடுக்கப்பட்டு, ரயில்வே கேட் ஆட்களை கொண்டு இறக்கப்பட்டது.ரயில்கள் கடக்கும் வரை, 'கேட்' மூடபட்டு இருக்கும். ரயில் கடந்த பின், 'சிக்னல்' கிடைத்ததும், ரயில்வே கேட், சாவி போட்டு திறக்கப்பட்டு, தடுப்பு உயர்த்தப்படும். இதற்கு மாற்றாக, ரயில்வே லெவல் கிராசிங்களில் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. அதில், மின்சாரத்தால் இயக்கும் கேட் திட்டத்தை செயல்படுத்த துவங்கியுள்ளது.ரயில்வே கேட் ஏற்றி, இறக்கும் போது, கேட் கீப்பர்களுக்கு உடல் அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. மேலும், அடிக்கடி பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி, ரயில்கள் கடந்து சென்ற பின், ரயில்வே கேட், 'மேனுவலாக' மேலே ஏற்றும் வரை, 5 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது.இதற்கு மாற்றாக, மின்சாரத்தால் இயக்கப்படும் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இதில், மின் ஏற்றம் பூட்டு கண்டறிதல் போன்ற அம்சங்கள் உள்ளன. 'பட்டனை' அழுத்தினால், ஒரே நேரத்தில் இரண்டு, 'கேட்'களும் இறங்குகின்றன. ரயில் வரும் போது, 'கேட்டில்' சிவப்பு ஒளியும் பிரதிபலிக்கிறது.'மேனுவலாக' செய்வது தேவைப்படும் வினாடிகளை விட, மின்சார ரயில்வே கேட் ஏற்றி, இறக்க குறைந்த வினாடிகளே எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.அதிகாரிகள் கூறியதாவது:பாலக்காடு ரயில்வே கோட்டத்தில், 60 ரயில்வே கேட்கள் உள்ளன. அதில், 30 கேட்களை இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. உடனடியாக தேவைப்படும் கிராசிங் இத்திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டது.சாலை போக்குவரத்தில், பரபரப்பான கிராசிங்களுக்கு முன்னுரிமை அளித்தல், பாதுகாப்பு செயல்திறன் மேம்படுத்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ரயில்வேயில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகிறது.இவ்வாறு, கூறினர்.