வால்பாறையில் மழை; கீழ்நீராறில், 33 மி.மீ.,
வால்பாறை: வால்பாறையில் பரவலாக மழை பெய்தது. கீழ்நீராறில், 33 மி.மீ., பதிவாகியுள்ளது. வால்பாறையில், இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப்பருவ மழையினால், பரம்பிக்குளம் பாசனத்திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. இதனால் பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த மாதம், 16ம் தேதி முதல் வடகிழக்குப்பருவ மழை துவங்கியது. கடந்த சில நாட்களாக வால்பாறையில் வெயில் நிலவிய வந்த நிலையில், நேற்று முன் தினம் வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. மழையினால் சுற்றுலாபயணியரும், உள்ளூர் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 158.49 அடியாக காணபட்டது. அணைக்கு வினாடிக்கு, 428 கன அடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 550 கன அடி வீதம் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்படுகிறது. அதிகபட்சமாக கீழ்நீராறில், 33 மி.மீ., மழை பெய்துள்ளது.