| ADDED : நவ 26, 2025 07:18 AM
கோவை: மாவட்ட அளவிலான 'வானவில் மன்ற' அறிவியல் போட்டியில், தங்களது அறிவியல் திறனை வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள், மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவிகளின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், அவர்களது கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும், 'வானவில் மன்ற' போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட அளவிலான அறிவியல் பழகு போட்டி, ராஜவீதி துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடைபெற்றது. முன்னதாக, பேரூர், கோவை மாநகர், எஸ்.எஸ்.குளம் உள்ளிட்ட 15 வட்டாரங்களில் பள்ளி மற்றும் வட்டார அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற அணிகள், மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றன. ஒரு குழுவில் 3 மாணவர்கள் இடம் பெறுவர். ஆனால், இந்த மாவட்ட இறுதி போட்டியில், குழுத் தலைவர்கள் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 45 அறிவியல் செயல்முறை விளக்கங்களை, மாணவர்கள் காட்சிப்படுத்தினர். இதில், கோட்டைப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதலிடத்தையும், நல்லட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. இப்பள்ளியை சேர்ந்த குழுவினர், விரைவில் நடைபெறவுள்ள மாநில அளவிலான அறிவியல் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.