ராமானுஜர் குருவை மிஞ்சிய சீடர்; வேங்கடேஷ் பேச்சு
மேட்டுப்பாளையம்: 'ராமானுஜர் குருவை மிஞ்சிய சீடராக திகழ்ந்ததால், ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்' என, ஆன்மீக சொற்பொழிவாளர் வேங்கடேஷ் பேசினார். இளைய தலைமுறையினர் மற்றும் மாணவ, மாணவர்களிடையே ஆன்மிகத்தை வளர்க்கும் நோக்கத்தில், காரமடை எஸ்.வி.டி., பசுமை அறக்கட்டளை, அரங்கநாதர் கோவிலில், சனிக்கிழமை வாரம் ஒரு பக்தி சொற்பொழிவை நடத்தி வருகிறது. 400 வது வார பக்தி சொற்பொழிவு காரமடை கோவில் வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு எஸ்.வி.டி., பசுமை அறக்கட்டளை நிறுவனர் சக்திவேல் தலைமை வகித்தார். நிர்வாகி ராஜேந்திரன் வரவேற்றார். வாழும் கலை சர்வதேச பயிற்சி ஆசிரியர் சசிகுமார் இறைவணக்கம் பாடினார். கும்பகோணம் ஆன்மீக சொற்பொழிவாளர் வேங்கடேஷ், 'ராமானுஜரும், ஆளவந்தாரும்' என்ற தலைப்பில் பேசுகையில், காஞ்சிபுரத்தில் குருகுலத்தில் ராமானுஜர் படிக்கும் பொழுது, குருவுக்கு தெரியாததை கூறி வந்தார். குருவை மிஞ்சிய சீடராக திகழ்ந்ததால், குருவானவர் ராமானுஜரை ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றினார். அதன் பின்பு ஆளவந்தாரின் கோரிக்கைகளை ராமானுஜர் நிறைவேற்றினார், என பேசினார். காரமடை அரங்கநாதர் கோவில், ஸ்தலத்தார் வேதவியாச சுதர்சன பட்டர், அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், டி.எஸ்.பி., (ஓய்வு) வெள்ளியங்கிரி, தாசப்பளஞ்சிய மகாஜன சங்க தலைவர் கோவிந்தன் உள்பட பலர் பேசினர். ஒவ்வொரு வாரம் பக்தி சொற்பொழிவு ஆற்றியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். பசுமை அறக்கட்டளை செயலாளர் அமரகவி நன்றி கூறினார். விழாவில் வெள்ளிக்குப்பம்பாளையம் ஆசிரியர் கோவிந்தராஜ் தலைமையில் வேணுகாண கலை குழுவினரின் வள்ளி கும்மி கலை நிகழ்ச்சியும், காரமடை ஸ்ரீபாதம் கலாசேத்திரா மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.