நீண்ட தொலைவில் இருந்து வரும் அரிய பறவைகள்
கோவில்பாளையம்; அன்னுாரை அடுத்த கோவில்பாளையம் அருகே 165 ஏக்கர் பரப்பளவு உள்ள அக்ரஹார சாமக்குளம் உள்ளது. இங்கு அக்ரஹார சாமக்குளம் ஏரி பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் கவுசிகா நீர்க் கரங்கள் சார்பில் நான்கு ஆண்டுகளாக ஞாயிறுதோறும் களப்பணி நடக்கிறது.இங்கு குளம் ஆழப்படுத்தப்பட்டு குளத்தின் நடுவே பல்லுயிர் பெருக்கத்திற்காக மண் திட்டு அமைக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் கூறுகையில், 'இங்கு 165 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்தில் 70 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. குளத்தில் மரங்கள், மண் திட்டுகள் உள்ளன. இதனால் தெற்கு ஆசியா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பறவைகள் இங்கு வருகின்றன. தற்போது குளம் பறவைகள் சரணாலயம் போல் காட்சியளிக்கிறது. புள்ளி மூக்கு வாத்து, சுத்தமான மழை நீரை மட்டும் அருந்தும் சுடலை குயில், வெண்தொண்டை மீன் கொத்தி, சாம்பல் வயிறு குயில், பழுப்பு நாரை, வலசை வரும் மரக்கதிர் குருவி, நாணல் கதிர் குருவி, நெடுங்கால் உள்ளான், கொசு உள்ளான், வேதிவால் பூச்சி பிடிப்பான், பொறி உள்ளான், கருஞ்சிட்டு, புள்ளி ஆந்தை உள்ளிட்ட பல்வேறு பறவைகள் நீண்ட தொலைவில் இருந்து இங்கு வருகின்றன.பறவைகளை பார்ப்பதற்காக அதிக அளவில் மக்கள் இங்கு கூடுகின்றனர். ஆர்வமுள்ளோர் ஞாயிறுதோறும் நடக்கும் களப்பணியில் பங்கேற்கலாம்,' என்றனர்.