வருகை பதிவுக்கு அரை மணி விலக்கு அளிக்க பரிந்துரை
கோவை; துாய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில், நலவாரிய அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், நல வாரிய தலைவர் ஆறுச்சாமி பேசியதாவது: கோவையில், 4,000க்கும் மேற்பட்டோருக்கு, நலவாரிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. அதிகாரிகளுடன் பேசி, முறையாக ஊதியம் வழங்கியதற்கான ஆதாரங்களை ஒப்பந்ததாரர்கள் கொடுத்துள்ளனர். தமிழக முதல்வரிடம் பேசி, துாய்மை பணியாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். கலெக்டர் அலுவலகத்தில் வாரம் ஒருமுறை நடப்பது போல், மாதம் ஒருமுறை துாய்மை பணியாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும். துாய்மை பணியாளர்கள், அதிகாலையில் துாய்மை பணிக்கு வருவதற்கு சரியான போக்குவரத்து வசதி இல்லை. வருகைப்பதிவு தாமதமாகி பதிவு ரத்தாகிறது. வருகை பதிவுக்கு அரை மணி நேரம் விலக்களிக்க வலியுறுத்தி உள்ளேன். இவ்வாறு, அவர் பேசினார். வாரிய துணை தலைவர் கனிமொழி உள்ளிட்ட பல நிர்வாகிகள் உடனிருந்தனர்.