கோவைக்கு நான்கு நாட்களுக்கு ரெட் அலர்ட்! பேரிடர் மீட்பு படைகள் வருகை
கோவை; ரெட் அலர்ட் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் கோவைக்கு நேற்று வருகை தந்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 27 வீரர்கள் மாநில பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த 30 வீரர்கள் என்று மொத்தம் 57 பேர் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.அதில் தேசிய பேரிடர் மீட்புபடையை சேர்ந்த 27 பேர் கொண்ட குழுவினர் வால்பாறை மலைப்பகுதிக்கும், 30 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்த வீரர்களில் 15 பேர் தொண்டாமுத்துார் பகுதிக்கும் 15 வீரர்கள் மேட்டுப்பாளையம் பகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து கோவை கலெக்டர் கூறியதாவது:தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் கன மற்றும் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணி தொடர்பாகவும் அதை சமாளிக்கவும் தயார் நிலையில் இருக்க பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தி உள்ளது.தீயணைப்பு, மீட்புப்பணிகள் துறை, மின்சாரவாரியம், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாவட்டத்தில் மழை பாதிப்பு ஏற்படும் பகுதிகளான வால்பாறை, தொண்டாமுத்துார், மேட்டுப்பாளையம் பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு வருவாய்த்துறை முகாம்கள் அமைத்து அங்கு தங்க வைக்கப்படுகின்றனர்.அங்கிருந்து மழை பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபடுவர். பேரிடர் மீட்புக்குழுவினரிடம், படகுகள், மரங்கள் வெட்டும் இயந்திரம் உள்ளிட்ட ஏராளமான மீட்பு உபகரணங்கள் உள்ளன.அதே சமயம் கோவை மாவட்டத்தில் உள்ள, 14 தீயணைப்பு அலுவலகங்களிலும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறையினரும் தயார் நிலையில் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.