ரயில் முன்பதிவு அவகாசம் குறைப்பு;பயணியர் சங்கம் வரவேற்பு
கோவை : ரயில்களில், 120 நாட்களுக்கு முன்பே, முன்பதிவு செய்யும் நடைமுறை தற்போது உள்ளது. இந்த அவகாசத்தை 60 நாட்களாகக் குறைத்து, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.வரும் நவ., 1ம் தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த மாறுதலும் இல்லை. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான முன்பதிவு அவகாசம், 365 நாட்கள் என்பதிலும் மாற்றம் செய்யப்படவில்லை.முன்பதிவுக் காலம் 60 நாட்களாக குறைக்கப்பட்டதை, ரயில் பயணிகள் வரவேற்றுள்ளனர். 120 நாட்களுக்கு முன்பே பயணத் திட்டம் என்பது சரியானதாக இல்லை. 60 நாட்கள்தான் சரி. இதனால், தட்கலுக்காக காத்திருக்க வேண்டியதில்லை, என தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக, போத்தனூர் ரயில் பயணிகள் சங்க தலைவர் சுப்ரமணியம் கூறியதாவது:120 நாட்களுக்கு முன்பே, முன்பதிவு என்பது, பொத்தாம் பொதுவாக முன்பதிவு செய்பவர்கள் பதிவு செய்து வந்தனர். கடைசி சில நாட்களில் கேன்சல் செய்து விடுவர். மேலும், டிக்கெட் புக்கிங் ஏஜெண்டுகளுக்கும் இது வசதியாக இருந்தது.தற்போது, 60 நாட்களாக குறைத்திருப்பது நல்லது. 60 நாட்களுக்குள்தான் பயணத்தைத் திட்டமிடுவோம். தேவையற்றவர்கள் புக் செய்து வைத்திருப்பது குறையும். ரயில்வே நிர்வாகத்தின் இம்முடிவால், ரயில் பயணிகளுக்கு நன்மையே.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.