முடங்கிய அங்கன்வாடி மையங்களுக்கு விடிவு; ஊழியர் நியமிக்க அரசு உத்தரவு
அன்னுார்; முடங்கியுள்ள அங்கன்வாடி மையங்களுக்கு விடிவுகாலம் பிறக்கிறது. அன்னுார் வட்டாரத்தில், 21 ஊராட்சி மற்றும் ஒரு பேரூராட்சியில் 100 அங்கன்வாடி மையங்கள் மற்றும் குறு மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் இரண்டு வயது முதல் ஐந்து வயது வரையிலான 3,700 குழந்தைகள் சத்துணவு உண்டு, கல்வி கற்று வருகின்றன. பணியில் இருந்து ஓய்வு, பணியிட மாறுதல், இறப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல மையங்களில் பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் சில மையங்கள் முடங்கி கிடக்கின்றன.இந்நிலையில் தமிழக அரசு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது. அன்னுார் வட்டாரத்தில் தாத்தம்பாளையம், சுக்கிரமணி கவுண்டன்புதூர், குன்னியூர், தெலுங்குபாளையம் காலனி கணுவக்கரை, கெம்பநாயக்கன்பாளையம், பொகலூர், செல்லப்பம்பாளையம், அன்னுார் வடக்கு, ருத்ரியம் பாளையம் ஆகிய மையங்களுக்கு உதவியாளர் பணியிடங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதனால் 10 மையங்களில் பணியாளர் பணியிடம் நிரம்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் மொத்த காலியிடங்களில் தற்போது 50 சதவீதம் மட்டும் நிரப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல பணியிடங்கள் காலியாக உள்ளன. 'சில அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. ஆலபாளையம் உள்பட மூடப்பட்ட பல மையங்களை மீண்டும் திறக்க வேண்டும். அனைத்து பணியிடங்களையும் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.