புட்டுவிக்கி ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்; மாநகராட்சி நகரமைப்பு பிரிவு நடவடிக்கை
கோவை ; கோவை - புட்டுவிக்கி ரோட்டில் வாய்க்கால்பாளையத்தில், சாலையோர ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று அகற்றினர்.கோவை மாநகராட்சி, 89வது வார்டு புட்டுவிக்கி ரோட்டில், வாய்க்கால்பாளையம் பகுதியில் சாலையின் இருபுறமும் கடைகளின் ஆக்கிரமிப்பு இருந்தது; சாலையின் ஒருபுறம் 10 அடி, மற்றொருபுறம் 15 அடி வீதம் மொத்தம், 25 அடிக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததால், ரோடு குறுகியிருந்தது.வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, தெற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி தலைமையிலான குழுவினர், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.சாலையில் ஆக்கிரமித்து வைத்திருந்த ஷெட், ஒர்க் ஷாப் கூடாரம், காம்பவுண்ட் சுவர் மற்றும் கம்பி வேலி உள்ளிட்டவை அகற்றப்பட்டன. அப்பகுதியில், சாலையை ஆக்கிரமித்து ஒரு பேக்கரி அமைக்கப்பட்டிருந்தது; மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் வழங்கியும் எடுக்கவில்லை; நகரமைப்பு பிரிவினர் நேற்று அக்கடையை முழுமையாக அகற்றினர்.மொத்தம், 1.5 கி.மீ., துாரத்துக்கு, 25 இடங்களில் ஆக்கிரமிப்புகள் எடுக்கப்பட்டன. இதன் பின், 70 அடி அகலத்துக்கு சாலை விஸ்தாரமாகி உள்ளது. போக்குவரத்து நெருக்கடியின்றி வாகனங்கள் சென்று வர வசதி ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாத அளவுக்கு மாநகராட்சி நகரமைப்பு பிரினர் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.