‘காலம்’ பகுதியை அகற்றுவது ஆபத்து!
* வீட்டின் ‘லிவிங் ரூம்’ பெரிதாகத்தான் இருக்க வேண்டுமா? நடுவில் இருக்கும் சுவரை அகற்றலாமா? இரண்டு அறைகளை ஒன்றாக மாற்ற நடுவிலுள்ள செங்கல் சுவரை அகற்றுமாறு ‘கான்ட்ராக்டர்’ சொல்கிறார். –மாலதி, ராமநாதபுரம். இல்லை. குறிப்பாக பழைய ‘லோடு பேரிங்’ கட்டடங்களில் எடை தாங்கும் அம்சத்துடன், சுவர்கள் நிறுவப்பட்டிருக்கலாம். ஆர்.சி.சி., பிரேம்டு கட்டடங்களில் சுவர் ‘பீம்’ துணையுடன் எடை தாங்கி கொண்டிருக்க வாய்ப்புள்ளது. எனவே, சுவரை அகற்றுவதற்கு முன் அது நிறுவப்பட்டதற்கான அம்சம் பற்றி அறிய வேண்டும். எடை தாங்கும் சுவர் என்றால் அதற்கு மாற்றாக பீம் அல்லது ஸ்டீல் துணை நிறுவப்பட்ட பின்னர் கட்டடங்களில் மாறுதல் செய்யலாம். * மின் வழித்தடம் அமைப்பதற்காக ‘காலம்’ பகுதியை வெட்டி எடுத்துவிட்டார்கள். இதனால் உள்ளே இரும்புகூட தெரிகிறது. இது ஆபத்தா? –விஜய்,கோவில்பாளையம். ‘காலம்’ பகுதியில் ஆழமாக வெட்டி எடுப்பது தவறான நடைமுறை. கான்கிரீட் கவர், அதன் வலிமை பாதிப்பதுடன், உள்ளே இருக்கும் இரும்பு ராடுகளையும் பாதித்து எதிர்காலத்தில் அரிமானம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ‘ரீபார்’ வெட்டப்பட்டிருந்தால் மிகவும் கவனமாக கட்டமைப்பு மதிப்பீடு செய்ய வேண்டும். வெறும் பிளாஸ்டர் போட்டு மறைக்கக்கூடாது. தாமதமின்றி சரிசெய்வது நல்லது. * மழைக்கு பிறகு காம்பவுண்ட் சுவர் கொஞ்சம் வெளியே சாய்ந்து வருகிறது. விரிசல்களும் வருகின்றன. உடனே இடிக்க வேண்டுமா? –கோபிநாத், பேரூர். இதை சாதாரண ‘பிளாஸ்டர் கிராக்’ என்று கருதக்கூடாது. அடித்தளம் அமைப்பு மாறுதல், தண்ணீர் தேங்குதல், மண் அழுத்தம், மரங்களின் வேர்கள் போன்றவையும் காரணமாக இருக்கலாம். இப்பிரச்னை இருக்கும்பட்சத்தில் அருகில் குழந்தைகள் அல்லது வாகனங்கள் செல்லாமல் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். பொறியாளர் ஆய்வு செய்து மறுகட்டமைப்பு செய்வது அல்லது புனரமைப்பது அவசியம். * கழிவுநீர் தொட்டியை, பாதுகாப்பாக பூமிக்குக் கீழே பரப்பி செலுத்தும் அடித்தளம் அருகில் கட்டலாமா? இடவசதி குறைவாக இருப்பதால் இதனருகே அமைக்க ‘கான்ட்ராக்டர்’ கூறுகிறார். ஏதேனும் பிரச்னை உள்ளதா? –பாலசுப்பிரமணியம், மதுக்கரை. கழிவுநீர் தொட்டியை அடித்தளம் அருகே அமைத்தால் மண்ணின் தன்மையை பாதிக்க வாய்ப்புள்ளது. கசிவு ஏற்பட்டால் மண் மென்மையாதலுடன், சுகாதார பிரச்னைகளும் ஏற்படலாம். அடித்தளம், கழிவுநீர் தொட்டி என இரண்டுக்குமான இடைவெளி அவசியம். * வீட்டின் அருகே பெரிய வேப்ப மரம் உள்ளது. அதன் வேர் காம்பவுண்ட் சுவர் மற்றும் தரைதளத்தை உயர்த்துகிறது. மரத்தின் வேர் கட்டடத்தின் அஸ்திவாரத்தை சேதப்படுத்துமா? –காயத்ரி, வடவள்ளி. நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, மரத்தின் வேர்கள் தொடர்ந்து படராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேசமயம், மரத்தின் வேர்களை திடீரென வெட்டுவது கூடாது. காரணம், அதன் பிடிமானத்தில் கட்டடங்கள் இருக்கும்பட்சத்தில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். பொறியாளரின் ஆலோசனையுடன் பணிகளை செய்வது நல்லது. * சுவரில் ‘பிளாஸ்டர்’ அமைப்பை தட்டினால் உள்ளே சத்தம் வருகிறது; ஆபத்தானதா? –ஹரிஹரன், பாப்பநாயக்கன்பாளையம். சரியான விகிதாசாரத்தில் மூலப்பொருட்களை கலக்காதது, பிளாஸ்டர் பிணைப்பு வலிமை குறைவது, கழிவு உள்ளிட்ட காரணங்களால் இந்த பாதிப்பு வரலாம். அப்பகுதியை ஆய்வு செய்து குறிப்பிட்ட பகுதியை மட்டும் அகற்றி மறு பிளாஸ்டர் செய்யலாம். * ஏ.ஏ.சி., பிளாக் சுவரில் அடிக்கடி செங்குத்தாக விரிசல் வருகிறது. பலமுறை ‘பட்டி’ பார்த்தும் சரியாவதில்லை. எதனால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. –நரேஷ், நீலாம்பூர். ஆர்.சி.சி., மற்றும் ஏ.ஏ.சி., பிளாக் ஆகிய இரண்டும் வேறு வேறு. வெப்பம் மற்றும் சுருங்கும் தன்மை கொண்ட பொருட்களை கொண்டவை. கற்கள் இணைப்பில் ‘மெஸ் ரீஇன்போர்ஸ்மென்ட்’ பயன்படுத்தாதது, முறையற்ற இணைப்பு பணி அல்லது பிளாஸ்டரிங் காரணமாக விரிசல் வரலாம். இதை பட்டி வைத்து மூடுவதற்கு பதிலாக சரியான மூலப்பொருட்கள் கொண்டு பராமரிப்பது பாதிப்புகளை தவிர்க்கும். –ஸ்ரீபிரசன்னராஜ், இணை செயலாளர் கோவை மண்டல கட்டட பொறியாளர்கள் சங்கம்(கொஜினா).