உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு செயல் அலுவலர் நியமிக்க கோரிக்கை

காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு செயல் அலுவலர் நியமிக்க கோரிக்கை

மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு, தனி செயல் அலுவலர் நியமிக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை காரமடை அரங்கநாதர் கோவில் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்டதாகும். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் ஐந்து சனிக்கிழமை விழாக்கள், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு, மாசி மகத் தேர்த்திருவிழா ஆகிய மூன்று திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும். பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, பிற வருவாய் வாயிலாக ஆண்டுக்கு, 4 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ளது. இக்கோவிலை, உதவி கமிஷனர் அந்தஸ்துக்கு உயர்த்த ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வு செய்துள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு, தற்போது தனி அலுவலர் இல்லாமல், கோவை தண்டு மாரியம்மன் கோவிலின் செயல் அலுவலர், அரங்கநாதர் கோவிலின் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு அவசியம் தனி அலுவலர் இருக்க வேண்டும். தற்போது கோவில் நந்தவனத்தை சுற்றி காம்பவுண்டு சுவர் கட்டும் பணிகளும், கோசாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தேர் நிறுத்த நிரந்தர செட் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணிகளை தினமும் கண்காணிக்க வேண்டும். ஆனால் கோவை தண்டு மாரியம்மன் கோவில் செயல் அலுவலர், இக்கோவிலின் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். இக்கோவிலுக்கு வாரத்திற்கு ஒரு சில நாட்கள் மட்டுமே வருவதால், நிர்வாகப் பணிகளை சரியாக கவனிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.எனவே மாவட்ட ஹிந்து சமய அறநிலைத்துறை நிர்வாகம், காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு என, தனியாக செயல் அலுவலர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பக்தர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை