பணியிட மாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டுகோள்
கோவை: பொதுப்பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் என, தமிழ்நாடு பொறியியல் கல்லுாரி தொழில்நுட்ப அலுவலர்கள் சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது. அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பணிபுரியும், தொழில்நுட்ப அலுவலர்கள், ஆசிரியர்கள், மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு, பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு மூன்று ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. சங்கத்தின் மாநிலத் தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், ''அனைத்து துறைகளிலும் பணியாளர்களுக்கு பொதுப்பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. ஆனால், உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்பக்கல்வித்துறை மற்றும் கல்லுாரி கல்வித்துறையில் பணிபுரியும், தொழில்நுட்ப அலுவலர்கள், ஆசிரியர்கள், அமைச்சுப்பணியாளர்களுக்கு இதுவரை கலந்தாய்வு நடத்தவில்லை. மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாததால் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம். உடனடியாக கலந்தாய்வை நடத்த வேண்டும் என, உயர் கல்வித்துறை அமைச்சரை கோரியுள்ளோம்,'' என்றார்.