பார்வையற்றோர் உதவி தொகை ரூ.5,000 ஆக உயர்த்த கோரிக்கை
கோவை: தேசிய பார்வையற்றோர் இணையம் தமிழ்நாடு கிளை பொதுக்குழு கூட்டம் மற்றும் சங்கத் தேர்தல் வரதராஜபுரத்தில் நடந்தது. ஓட்டுச்சீட்டுகள் பிரய்லி முறையில் தயார் செய்யப்பட்டிருந்தன. 200க்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர். தலைவராக வின்சென்ட், பொதுச்செயலாளராக பர்குணன், துணை தலைவர்களாக முத்துதுரை, ராமானுஜம், நிவேதா, மஞ்சுராஜ், செயலாளர்களாக ஆறுமுகம், சூர்யா, பொருளாளராக பழனி தேர்வு செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் குறித்த விரிவான கணக்கெடுப்பு நடத்த வேண்டும், பராமரிப்பு உதவித்தொகையை ரூ.1,500ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும், தகுதியானவர்களுக்கு ஏ.ஏ.ஒய். ரேஷன் கார்டு, பட்டா கோரும் மனுக்கள் மீது 3 மாதத்திற்குள் நடவடிக்கை, டெட் தேர்ச்சிக்கு 7 ஆண்டுகள் அவகாசம் அளித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.