மேலும் செய்திகள்
வாகனங்களை ஏலமிட போலீசார் திட்டம்
26-Jan-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, குற்ற வழக்குகளில் சிக்கிய வாகனங்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.விபத்து, கொலை, கொள்ளை, கடத்தல், வழிப்பறி, திருட்டு உட்பட பல குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், போலீஸ் ஸ்டேஷன் மற்றும் கோர்ட் வளாகத்தில் காணப்படும்.ஆனால், பொள்ளாச்சியில், மகாலிங்கபுரம் கல்லுாரிச் சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, குற்ற வழக்கில் தொடர்புடைய வாகனங்கள் அனைத்தும் கோர்ட் சொத்தாக மாறி விடுகிறது.வழக்கு விசாரணை முடிய குறைந்தபட்சம், 2 முதல் 5 ஆண்டுகள் ஆவதால் வாகனங்கள் நாளடைவில் எலும்புக் கூடாக மாறிவிடுகிறது. வழக்கின் முடிவில் உருக்குலைந்து காணப்படும் இந்த வாகனங்களை அதன் உரிமையாளர்கள் எவரும் எடுத்துச் செல்ல விரும்புவதில்லை. இதனால், மொத்தமாக, ஏலத்தில் விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாயை அரசு கருவூலக் கணக்கில் சேர்க்க வேண்டும்.தன்னார்வலர்கள் கூறியதாவது: பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில், பேட்டரி, முகப்பு விளக்குகள், டயர் உள்ள பல பாகங்கள் மாயமாகியும் வருகின்றன. ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் அனைத்து வாகனங்களும் சாம்பலாகிவிடும்.சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் இடம் இல்லையெனில், காவல்துறைக்கு சொந்தமான ஏதேனும் ஒரு இடத்திற்கு வாகனங்களை இடமாற்றம் செய்ய வேண்டும். அங்கு, தீ விபத்து, திருட்டு உள்ளிட்டவைகளில் இருந்து பாதுகாக்க, வாகன பாதுகாப்பு கிடங்கு அமைக்கலாம்.மதுவிலக்கு தொடர்பான வழக்குகளில் பிடிபடும் வாகனங்கள், ஆறு மாதம் அல்லது ஓராண்டுக்குள் ஏலம் விடப்படுகின்றன. இதனால் இந்த வாகனங்களைப் பலர் வாங்குகின்றனர்.இதுபோல, முற்றிலும் சேதமான வாகனங்களை ஏலம் விடும்போது, மெக்கானிக்குகள் வாங்கிச் சென்று உதிரி பாகங்களாக விற்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
26-Jan-2025