அரசம்பாளையம் ரோட்டை அகலப்படுத்த கோரிக்கை
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட, பல ரோடுகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதில், ஒரு சில ரோடுகளை சீரமைக்கும் பணிகள் தற்போதது நடக்கிறது. சில ரோடுகளில், 'பேட்ச் ஒர்க்' பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதில், கிணத்துக்கடவு -- அரசம்பாளையம் செல்லும் ரோடு குறுகலாக உள்ளது. இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் செல்லும் போது, எதிரே வாகனங்கள் வந்தால், ஒதுங்கி செல்ல முடியாத நிலை உள்ளது. ரோட்டோரத்தில் பள்ளமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், வாகனங்கள் எதிர் எதிரே செல்லும் போது அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே, இந்த ரோட்டோரம் இருக்கும் பள்ளத்தை மூடி, ரோட்டை விரைவில் அகலப்படுத்த வேண்டும். விபத்து தவிர்க்க, வளைவு பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு வைக்க வேண்டும். வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.