சத்துணவு பணியாளர்களை முழுநேர பணியாளராக்க தீர்மானம்
வால்பாறை:சத்துணவு பணியாளர்களை முழுநேர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய பொதுக்குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வால்பாறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய பொதுக்குழு கூட்டம், மாதா நர்சரி ஆரம்ப பள்ளியில் நடந்தது. பொதுக்குழு கூட்டத்திற்கு வால்பாறை வட்ட கிளை ஒன்றிய செயல் தலைவர் சோபியா தலைமை வகித்தார். செயலாளர் ராம்குமார் வரவேற்றார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் சசீந்தரன், தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் ஒன்றியத்தில் மாநில செயலாளர் சுகன்யா, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார், மாவட்ட தலைவர் முரளி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், சத்துணவு பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை முழு நேர பணியாளர்களாக மாற்ற வேண்டும். நகராட்சியில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாதம் தோறும், 1ம் தேதி சத்துணவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சி சத்துணவுபணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தமிழ்நாடு அரசு அலுவலர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வால்பாறை வட்டகிளை அமைப்பு செயலாளர் முனீஸ்வரன் நன்றி கூறினார்.