உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சுங்கம் - உக்கடம் வாலாங்குளம் பைபாஸில் எதிரே வரும் வாகனங்களால் விபத்து அபாயம்

 சுங்கம் - உக்கடம் வாலாங்குளம் பைபாஸில் எதிரே வரும் வாகனங்களால் விபத்து அபாயம்

கோவை: கோவை சுங்கம் சந்திப்பில் இருந்து உக்கடம் நோக்கிச் செல்லும் வாலாங்குளம் ரோட்டில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி, எதிர்திசையில் வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. கோவை, திருச்சி ரோட்டில் சுங்கம் 'ரவுண்டானா' பகுதியில் ஏழு ரோடுகள் சந்திக்கின்றன. இப்பகுதியில் இருந்து உக்கடம் நோக்கிச் செல்வோர் வாலாங்குளம் பை-பாசை பயன்படுத்துகின்றனர். இந்த ரோட்டில் குறுக்கு வீதிகள் அதிகமாக உள்ளன. திருச்சி ரோடு மேம்பாலத்தில் இறங்கி வரும் வாகனங்களும் இணைகின்றன. சிவராம் நகர், ஆல்வின் நகர் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளில் இருந்து வருவோரும் உண்டு. அதேபோல், புல்லுக்காடு மைதானம், மீன் மார்க்கெட் சுற்றுவட்டாரத்தில் இருந்தும் ஏராளமான வாகனங்கள் வாலாங்குளம் பை-பாசை பயன்படுத்துகின்றன. இதன் காரணமாக, காலை முதல் இரவு வரை வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கிறது. பீக் ஹவர்ஸ் சமயத்தில் நெருக்கடி ஏற்படுகிறது.

Galleryஎதிர் திசையில் உக்கடம் சந்திப்பில் இருந்து கோட்டைமேடு அல்லது சுங்கம் சந்திப்பு நோக்கி ஏராளமான வாகனங்கள் வருகின்றன. இவர்கள் எதிர்திசையில் உள்ள குடியிருப்புகளுக்கு அல்லது வர்த்தக நிறுவனங்களுக்கு செல்ல வசதியாக மையத்தடுப்பில் இடைவெளி விடப்பட்டிருக்கிறது. இடைவெளி வழியாக இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்களில் வருவோர், எதிர்திசையில் குறுக்கே பயணித்து, உக்கடம் புல்லுக்காடு பகுதிக்குச் செல்கின்றனர். அப்பகுதியில் தனியார் பள்ளி செயல்படுகிறது. பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வருவோர் இப்பாதையில் வருவதால், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. வாகனங்களில் குறுக்கும் நெடுக்குமாக செல்கின்றனர். விபத்து அபாயம் ஏற்படுகிறது. சுங்கம் சந்திப்பில் இருந்து உக்கடம் செல்லும் வழித்தடத்தின் இடதுபுறம் எந்தெந்த இடத்தில் இணைப்பு சாலைகள் இருக்கிறதோ, அவ்வழித்தடத்துக்கு செல்லும் வகையில் மையத்தடுப்பு கற்கள் அகற்றப்பட்டு, இடைவெளி விடப்பட்டுள்ளது. அங்கு மீண்டும் மையத்தடுப்புகள் அமைத்து, ரவுண்டானா பகுதிக்கு வாகனங்கள் சென்று சுற்றி வரும் வகையில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில், வாகனங்கள் நேருக்கு நேர் மோதி, விபத்தை சந்திக்கக் கூடிய வாய்ப்பிருக்கிறது. உயிர் பலி ஏற்படும் முன் இப்பகுதியை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து போலீசார் கள ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுண்டம்பாளையம் பாலத்தின் இறக்கத்தில் உயிர் பலி ஏற்பட்ட பின், வேகத்தடை அமைத்திருப்பதை போல், மெத்தனமாக செயல்படக் கூடாது. மனித உயிர் முக்கியம் என்பதை உச்சநீதிமன்ற சாலைப்பாதுகாப்பு குழு தலைவர் நீதிபதி அபய் மனோகர் சப்ரே, கோவையில் சமீபத்தில் நடந்த சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் வலியுறுத்தியதை அனைத்து அரசு துறை அதிகாரிகளும் உணர்ந்து செயல்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ