சாலை விபத்துகளில் கொடூரம்; 26 நாட்களில் 27 பேர் உயிரிழப்பு
கோவை; ஜூன், 1ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடந்த சாலை விபத்துகளில் சிக்கி மூன்று சிறுவர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர்.கோவை மாநகர பகுதிகளில் மோசமான சாலை, கவனக்குறைவு, அதிவேகம், மதுபோதையில் வாகனங்கள் இயக்கம் போன்ற காரணங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் பலர் உயிரிழக்கின்றனர். விபத்துகளை குறைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.எனினும் சாலை விபத்துகளும், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு கொண்டு தான் உள்ளன.ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்துதல், கவனக்குறைவால் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்துவோரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். மேலும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், வாகன உரிமையாளர் கைது செய்யப்படுகிறார்.கடந்த ஆறு மாதங்களில், 147 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த 1ம் தேதி முதல் 26ம் தேதி வரை மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.இம்மாதம் மட்டும் சாலை விபத்துகளை ஏற்படுத்திய, ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.