சாலை விரிவாக்கம் செய்தும் பயனில்லை நகரில் நாளுக்கு நாள் நெரிசல் அதிகரிப்பு
பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி நகரில் சாலை விரிவாக்கம் செய்து, ரவுண்டானா அமைத்தும் வாகன நெரிசலுக்கு தீர்வு கிடைக்கவில்லை. நாளுக்குநாள் அதிகரித்து வரும், போக்குவரத்து பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, மேம்பாலம் அமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர். பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. இப்பணிக்காக நிலங்கள் கையகப்படுத்த தனியார் நிலங்களுக்கு, 33.57 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. விரிவாக்கப்பணிகள், 34.61 கோடி ரூபாய் செலவில் நடைபெற்றன. அதில், சாலை சந்திப்பு பகுதியான மரப்பேட்டை, தேர்நிலையம், தலைமை தபால் அலுவலகம், காந்தி சிலை, பஸ் ஸ்டாண்ட் ஆகிய ஐந்து பகுதிகளில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. எதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதோ அதன் நோக்கமே வீணாகும் சூழல் உள்ளது. ரவுண்டானா பகுதியில், நான்கு பக்கத்தில் இருந்தும் வரும் வாகனங்கள், ஒரே நேரத்தில் திரும்ப முற்படும் போது, நெரிசல் ஏற்படுகிறது. ஒரு வாகனத்துக்கு பின் ஒரு வாகனமாக வரிசை கட்டி நிற்க வேண்டிய சூழல் உள்ளது. ரவுண்டானா அமைக்கப்பட்ட பகுதிகளிலும் நெரிசல் ஏற்பட்டால், ஒட்டுமொத்த நகரம் முழுவதும் வாகனங்கள் தேங்குவதால், நகரமே ஸ்தம்பித்து விடுகிறது. அதிலும்,காந்தி சிலை மற்றும் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதிகளில், அவ்வப்போது வாகன நெரிசலால், மக்கள் அவதிக்குள்ளாவது தொடர்கிறது. அவசரத்துக்கு செல்பவர்களும், ஆம்புலன்ஸ்களும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. 'பார்க்கிங்' பிரச்னை மேலும், சாலை விரிவுபடுத்திய பகுதிகளில், போக்குவரத்து வசதியை மேம்படுத்தாமல், கார், பைக் போன்றவை நிறுத்தும் 'பார்க்கிங்' பகுதியாக மாற்றியுள்ளனர். கோவை ரோடு, நியூஸ்கீம் ரோடு, உடுமலை ரோட்டில், 'நோ பார்க்கிங்' பகுதியில், வாகனங்கள் அத்துமீறி நிறுத்தப்படுவதால், நெரிசல் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் போது, போதிய போலீசார் இல்லாத நிலையில், நெரிசலை சரி செய்ய சிரமப்படுகின்றனர். தீர்வு தேவை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, உடுமலை ரோடு, கோவை ரோட்டை இணைக்கும் வகையில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசியல் அழுத்தத்தால், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு, சாலைகள் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப்பணியும் முழு அளவில் மேற்கொள்ளப்படாததால், நகரில் நெரிசல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதே, போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாகும், என, வலியுறுத்தப்படுகிறது. அப்போது தான், உடுமலையில் இருந்து வரும் வாகனங்கள் நகருக்குள் நுழையாமல், மேம்பாலம் வழியாக கோவை ரோட்டை அடையும். சர்வீஸ் ரோடுகளில் உள்ளூர் போக்குவரத்து மட்டுமே இருக்கும். இதனால், நெரிசல் இருக்காது என, மக்கள் தெரிவித்தனர்.