சாலை பாதுகாப்பு விழா; மாற்றி யோசியுங்க! சம்பிரதாய விழாவாக நடத்த வேண்டாம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், ஆண்டுதோறும், சிறிதும் வேறுபாடின்றி நடத்தப்படும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு, வெறும் சம்பிரதாய விழாவாக மாறியுள்ளது.ஆண்டு முழுவதும், இயற்கை மரணங்களை விட, சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இத்தகைய சாலை விபத்து மற்றும் உயிரிழப்பை தடுக்க, அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் சாலைப் பாதுகாப்பு வார விழா முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.அவ்வகையில், ஆண்டுதோறும், ஜன., 1 முதல் 7ம் தேதி வரை சாலைப் பாதுகாப்பு வார விழா நடத்தப்படுகிறது. பொள்ளாச்சியில் இந்தாண்டு சாலைப்பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.வழக்கமாக விழிப்புணர்வு பேரணி, சாலை விதிகள் குறித்து துண்டுப் பிரசுரம் விநியோகம், வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுதல், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்காக கருத்தரங்கம், ஓட்டுநர்களுக்கு கண் சிகிச்சை, ரத்த தானம் முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.ஆண்டுதோறும் ஒரே மாதிரியான நிகழ்வுகள் நடத்தப்படுவதால், சாலைப் பாதுகாப்பு வார விழாவில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மக்களைச் சென்றடைவதில்லை என்ற கேள்வியே பலதரப்பட்ட மக்களிடம் எழுந்துள்ளது.தன்னார்வலர்கள் கூறியதாவது:சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு முழுமையாக மக்களைச் சென்றடையும் வகையில் இருக்க வேண்டும். இதற்கு, சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது குறித்தும் ஒவ்வொரு இடத்திலும் நேரடியாக வாகன ஓட்டுநர்களிடையே கேள்வி எழுப்பி, அவர்களின் நிலை அறிந்து, மாற்றிக் கொள்ள அறிவுறுத்தலாம். அபராதம் விதிப்பதை தவிர்த்து, தொடர்ந்து அவர்களின் விதிமீறலை சுட்டிக் காட்டலாம்.அடிப்படை சாலை பாதுகாப்பு விதிகளை அறிந்திருக்க சமூகவலைதளங்களில் பதிவிடலாம். ஆடியோ- மற்றும் வீடியோ காட்சிகளைப் பயன்படுத்தி, விபத்துக்கள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதை காட்சிப்படுத்தலாம். புதிய சாலை அடையாளங்கள் மற்றும் சிக்னல்களை விளம்பரப்படுத்தலாம். தன்னார்வ அமைப்புகளை உள்ளடக்கி எப்போதும் ஒரு பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யலாம்.இவ்வாறு, கூறினர்.