எஸ் பெண்டு பகுதியில் வருகிறது ரவுண்டானா; நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அனுமதி
கோவை : கோவை தண்ணீர் பந்தல் 'எஸ்' பெண்டு பகுதியில், 'ரவுண்டானா' அமைப்பதற்கான நிலத்தை கையகப்படுத்த, மாநகராட்சியின் பொது நிதியை பயன்படுத்திக் கொள்ள, தமிழக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகம் அனுமதி அளித்திருக்கிறது.கோவை மாநகராட்சி, 24வது வார்டு தண்ணீர் பந்தல் ரோடு, 'எஸ்' பெண்டு பகுதி என்பது விளாங்குறிச்சி ரோடு, அவிநாசி ரோடு செல்லும் தண்ணீர் பந்தல் ரோடு, கொடிசியா ரோடு, சத்தி ரோடு இணைக்கும் சேரன் மாநகர் ரோடு என, நான்கு ரோடுகளை இணைக்கிறது.தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழியை கடக்கின்றன. இது, அவிநாசி ரோட்டையும், சத்தி ரோட்டையும் இணைக்கும். இப்பகுதியில், மின் கம்பங்களை எல்லையாகக் கொண்டு, ஆக்கிரமிப்புகள் உருவாகியுள்ளன.சிலர், கடைகள் கட்டி, வாடகைக்கு விட்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, ரோட்டை அகலப்படுத்த முயற்சிக்கப்பட்டது. பட்டா நிலத்தில் வசிப்போருக்கு இழப்பீடு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால், கிடப்பில் போடப்பட்டது.பட்டா நிலங்களை தவிர்த்து, மீதமுள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றினால், 40 அடிக்கு விசாலமான ரோடு கிடைக்கும்; சத்தி ரோட்டுக்குச் செல்ல இணைப்பு சாலை கிடைக்கும். ஆனால், ஆக்கிரமிப்பு அகற்றாமல், தேவையான நிலத்தை கையகப்படுத்தாமலும் ரோட்டை புதுப்பித்தனர்.அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை அடிப்படையில், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கள ஆய்வு செய்தனர். அங்குள்ள, 39.73 சென்ட் நிலத்தில், 11 தனியார் பட்டா நிலங்கள் உள்ளன. போக்குவரத்து நெரிசலை களையவும், பாதுகாப்பான போக்குவரத்துக்காகவும் நிலம் கையகப்படுத்தி, 'ரவுண்டானா' அமைக்க, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகத்துக்கு, கலெக்டர் கிராந்திகுமார் கடிதம் எழுதினார்.அவ்விடத்தை அபிவிருத்தி செய்வதற்காக, நில அட்டவணை தயாரித்து, நிர்வாக அனுமதி கோரி, நில நிர்வாக ஆணையருக்கு கடிதம் எழுதப்பட்டது. அவரது பரிந்துரைப்படி, வருவாய்த்துறை மற்றும் நிதித்துறையில் இருந்து, அனுமதி வழங்கப்பட்டு விட்டது.நிலம் கையகப்படுத்த தேவையான நிதியை, நகர அபிவிருத்தி மற்றும் வளர்ச்சி கட்டண நிதியில் இருந்து வழங்க, மாநகராட்சியில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால், மாநகராட்சியின் பொது நிதியில் இருந்து செலவழித்துக் கொள்ள அனுமதி அளித்து, தமிழக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகம், நிலம் கையகப்படுத்த ஒப்புதல் அளித்திருக்கிறது.
'இணைப்பு சாலை கிடைக்கும்'
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''எஸ் பெண்டு பகுதியில் தேவையான நிலம் கையகப்படுத்துவதற்கான தொகையை, மாநகராட்சி வழங்கும். வருவாய்த்துறையில் இருந்து நில உரிமையாளர்களிடம் பேசி, அதற்குரிய இழப்பீடு தொகையை பயனாளிகளிடம் வழங்கி, கையகப்படுத்தி வழங்குவர். அதன்பின், 'ரவுண்டானா' அமைத்து, போக்குவரத்து தேவைக்கேற்ப அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படும். அவிநாசி ரோட்டுக்கும், சத்தி ரோட்டுக்கும் இணைப்பு சாலை கிடைக்கும்,'' என்றார்.