பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்
பொள்ளாச்சி,; 'வெள்ளை ஈக்களால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்,' என, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று நடந்தது.தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். கோவை மாவட்ட குழு மந்திரியப்பன், கோவை மாவட்ட செயலாளர் ஸ்டாலின் பழனிசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் வெள்ளை ஈக்களால், கடுமையாக பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு, மரம் ஒன்றுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்க வேண்டும். மரங்களை பாதுகாக்க ஆலோசனை வழங்க வேண்டும்.அனைத்து தென்னை மரங்களுக்கும் பயிர் காப்பீடு செய்ய உரிய நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்.சொட்டுநீர் பாசன திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.