உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ. 19.97 கோடியில் குடிநீர் விஸ்தரிப்பு திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது

ரூ. 19.97 கோடியில் குடிநீர் விஸ்தரிப்பு திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது

மேட்டுப்பாளையம்: சிறுமுகை பேரூராட்சியில், 19.97 கோடி ரூபாய் செலவில், குடிநீர் விஸ்தரிப்பு திட்டம், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.சிறுமுகை பேரூராட்சியில், சீரான குடிநீர் வினியோகம் செய்ய, மத்திய அரசின் அம்ருத் குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 19.97 கோடி ரூபாய் செலவில், விஸ்தரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இது குறித்து சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் கூறியதாவது: சிறுமுகையில் தற்போது நடைமுறையில் உள்ள குடிநீர் திட்டம், 30 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. அதனால் குழாயில் பல இடங்களில் அடிக்கடி உடைப்புகள் ஏற்படுகின்றன.குழாய் உடைப்பை சரி செய்யும் பொழுது, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதில், காலதாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ், குடிநீர் விஸ்தரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.இத்திட்டத்தில் புதிதாக, 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலைத் தொட்டியும், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு தொட்டிகள், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, ஒரு மேல்நிலைத் தொட்டியும் என, மொத்தம் நான்கு மேல்நிலைத் தொட்டிகள், புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நகரில் அனைத்து பகுதிகளிலும் புதிதாக மெயின் மற்றும் பகிர்மான குழாய்கள் பதித்து முடிக்கப்பட்டுள்ளன. தற்போது நான்கு மேல்நிலைத் தொட்டிகளிலும் தண்ணீரை நிரப்பி, வெள்ளோட்டம் நடைபெறுகிறது. இன்னும் ஒரு சில இடங்களில், குழாய்கள் இணைக்கும் பணியானது நடைபெற உள்ளது. விரைவில் அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்படும்.அதன் பின்பு பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செயல் அலுவலர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை