ரூ.41 லட்சம் மோசடி வழக்கு; குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்
கோவை; இலங்கை வல்வெட்டிதுரையை சேர்ந்தவர் லவசாந்தன், 35. 2017ம் ஆண்டு கோவையில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களில், சிறிய அளவிலான கேமரா பொருத்திய இவர், வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம்.கார்டு விபரங்களை பெற்றார். தொடர்ந்து அதன் வாயிலாக, போலி ஏ.டி.எம்.கார்டுகள் தயாரித்து வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் இருந்து, ரூ.41 லட்சத்தை திருடினார். கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, லவசாந்தனை சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு, கோவை ஜே.எம்.4 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இவ்வழக்கு விசாரணை நடந்தது. திருச்சி சிறையில் இருந்து லவசாந்தனை அழைத்து வந்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணையை நீதிபதி அருண்குமார் வரும், 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.