கோடை உழவுக்கு ரூ.800 மானியம்
ஆனைமலை; ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ளது. தென்னை, நெல் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.தற்போது கோடை காலம் என்பதால், விவசாயிகள் கோடை உழவு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.உழவுப்பணியில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் திட்டம் வேளாண்துறை வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது:ஆனைமலை வட்டாரத்தில், மாநில வேளாண் வளர்ச்சித்திட்டம் வாயிலாக, 2025 - 26ம் நிதியாண்டில், மானவாரி நிலங்களில் கோடை உழவு செய்வதை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், காரீப் பருவத்தில் மானாவாரி நிலங்களில் சோளம், மக்காச்சோளம், கம்பு, எள், நிலக்கடலை, உளுந்து, தட்டை, துவரை, கொள்ளு போன்ற பயிர் சாகுபடிக்கு, முன்பருவ விதைப்புக்கு ஏதுவாகவும், மண்ணில் மழைநீரை சேமித்து ஊடுபயிருக்கும் ஊக்கம் அளிக்கும்.மண் கட்டமைப்பை மேம்படுத்தி ஈரம் காக்கவும், பயிருக்கு தீங்கு செய்யும் பூச்சிக்கூடுகளையும், பூஞ்ஞான வித்துக்களையும் மண்ணின் மேற்பரப்புக்கு கொண்டு வந்து அழிப்பதே கோடை உழவில் முக்கியத்துவமாகும். இக்கோடை உழவு பணியானது, ஜூன் மாதம் 15ம் தேதி வரை மழைப்பொழிவை பொறுத்து மேற்கொள்ளலாம்.கோடை உழவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியமாக ஏக்கருக்கு, 800 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு மானியம் வழங்குதலில் முன்னுரிமை வழங்கப்படும்.ஆனைமலை வட்டாரத்துக்கு, 250 ஏக்கர் இலக்கு பெறப்பட்டுள்ளது.கோடை உழவு மேற்கொண்டு மானியம் பெற விருப்பம் உள்ள மானாவாரி நில விவசாயிகள், உழவன் செயலி அல்லது www.tnagrisnet.gov.inஎன்ற வலைதளத்தில் பதிவு மேற்கொள்ளலாம்.மேலும், விபரங்களுக்கு ஆனைமலை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, கூறினார்.