கோவை வேளாண் பல்கலையில் வாவ் சொன்ன ருவாண்டா இன்ஜினியர்கள்
கோவை : வேளாண்மை மற்றும் நீர் மேலாண்மையில், சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கு, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதனொரு பகுதியாக, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், ருவாண்டா நாட்டு அரசின், நீர்ப்பாசன மற்றும் வேளாண் இன்ஜினியர்களுக்கு, 4 மாத திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் நடத்தப்படுகிறது.இப்பயிற்சித் திட்டத்தில், நீர்ப்பாசனம், மண் மற்றும் நீர் பாதுகாப்பு, பண்ணை இயந்திரங்கள் மற்றும் உயிரி ஆற்றல் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன.இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, டெக்ஸ்மோ மற்றும் அக்வாடெக்ஸ், ஏ.டி.எக்ஸ்., பிராண்ட்களுக்கு உள்நாடு மற்றும் சர்வதேச அளவில், புகழ்பெற்ற பம்ப் உற்பத்தி நிறுவனமான, அக்வா குழுமத்தில் ஒரு நாள் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. எட்டு ருவாண்டா இன்ஜினியர்கள் இப்பயிற்சியில் பங்கேற்றனர்.பல்வேறு விவசாய நிலத்தின், பண்புகளுக்கேற்ப பம்ப்களை தேர்வு செய்வது, பம்ப் அமைப்புகளின் செயல்திறனை மதிப்பிடுதல் மற்றும் சரி செய்தல், ஆற்றல் மிக்க விவசாய பம்ப்கள், சிறப்பு பயன்பாட்டுக்கான பம்ப்கள், சோலார் பம்ப்கள், நீர்ப்பாசன அமைப்புகளின் வடிவமைப்பு ஆகிய துறைகளில், சிறப்பு பயிற்சி பெற்றனர்.மேம்பட்ட ரோபோ அமைப்புகள், தானியங்கி உற்பத்தி தொழில்நுட்பங்களைக் கொண்ட தொழில்துறை 4.0 செயல்பாடுகள், ருவாண்டா இன்ஜினியர்களை வியப்பில் ஆழ்த்தின.அக்வாசப் இன்ஜினியரிங் மேலாளர் (சந்தைப்படுத்துதல்) சுரேஷ்குமார், தொழில்நுட்ப பிரிவுகளின் தலைவர்கள் ரவி, திருமேனி, வேளாண் பல்கலை நீர் மற்றும் புவியியல் ஆய்வு மைய இயக்குநர் பழனிவேலன், இணைப் பேராசிரியர் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.