கிளவுஸ் ரெண்டு நாள் கூட தாங்காதுங்க; கமிஷனரிடம் துாய்மை பணியாளர்கள் குமுறல்
கோவை; கிளவுஸ் உள்ளிட்ட உபகரணங்களில் இருக்கும் குறைகளை, துாய்மை பணியாளர்கள் நேற்று சுட்டிக்காட்டியதும், உரிய நடவடிக்கை எடுப்பதாக, மாநகராட்சி கமிஷனர் உறுதி அளித்தார். கோவை மாநகராட்சி பகுதிகளில், திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது. குப்பை சேகரிக்கும் விதமாக வாகனங்கள், தள்ளுவண்டிகள், பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் உள்ளிட்டவை, துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், நேற்று பேட்டரியில் இயங்கும், 26 எண்ணிக்கையிலான மூன்று சக்கர வாகனங்கள், 25 எண்ணிக்கையில் நான்கு சக்கர வானங்கள் வழங்கப்பட்டன. ஐந்து டன் எடையை தாங்கும் திறனுடைய, இரண்டு இலகு ரக வாகனங்கள், 800 பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டன. துாய்மை பணியாளர்கள், 6,100 பேருக்கு தலா இரண்டு 'செட்' சீருடை வழங்கும் பணியையும், மேயர் ரங்கநாயகி, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். தீபாவளி சமயத்தில் துாய்மை பணியாளர்களுக்கு சேலை, கையுறை, காலணி, துாய்மை பணிக்கான உபகரணங்கள் வழங்கப்படும். அதில், துாய்மை பணிக்கான உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. துாய்மை பணியாளர்களில் சிலர் அங்கு வைக்கப்பட்டிருந்த கையுறை, 'ரிப்ளெக்டர் கோட்' உள்ளிட்டவற்றை எடுத்து தரத்தை சோதித்ததுடன், காலணிகளின் அளவுகளையும் சரி பார்த்தனர். உபகரணங்களை பார்வையிட்ட கமிஷனரிடம், 'இந்த கிளவுசு, ரெண்டு நாளைக்குக்கூட தாங்காதுங்க சார். தலைக்கு போடற தொப்பியும் 'ரிப்ளெக்டர் கோட்' நிறத்துல இல்லை. அதே நிறத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்' என, துாய்மை பணியாளர்கள் குறைகளை சுட்டிக்காட்டினர். கமிஷனரும் மாற்று நடவடிக்கை எடுப்பதாக, உறுதியளித்தார். துாய்மை பணியாளர்கள் கூறுகையில், 'மழை, வெயில் பாராமல் சுகாதார பணிகளை மேற்கொள்கிறோம். துாய்மை பணிக்கான உபகரணங்களை தரமானதாக வழங்கினால் மட்டுமே பாதுகாப்பாக பணிபுரிய முடியும்' என்றனர்.