கொ ங்கு நாட்டின் பல இடங்களிலும் இன்று நாம் பார்க்கும் திருநீற்று மேடு, நத்தமேடு போன்ற கிராமப் பெயர்கள் வெறும் பெயர்கள் அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, மேய்ப்பர்களின் வாழ்க்கையை நினைவுபடுத்தும் சின்னங்கள். 3000 ஆண்டுகளுக்கு முன், கொங்கு மக்களின் பூர்வகுடிகள் ஆடுகள், மாடுகளை மேய்த்து வாழ்ந்தவர்கள். அவர்கள் ஒரே இடத்தில் தங்காமல், புல் கிடைக்கும் இடத்துக்கு இடம் மாறிச் செல்வார்கள். மேய்ச்சல் முடிந்ததும், கால்நடைகள் விட்டுச் சென்ற சாணங்களை, காய வைத்து குவித்துப் போட்டு எரிப்பார்கள். அது பெரிய சாம்பல் மேடாக மாறும். அந்தச் சாம்பல் மேடுகள் மீது மனிதர்களும், கால்நடைகளும் நடப்பர். அப்படி நடந்தால் நோய் வராது என்று அவர்கள் கருதினர். இதன் தொடர்ச்சியாகவே, இன்று கோயில்களில் தீக்குண்டம் இறங்கும் மரபு நடப்பதாக, வரலாற்றாசிரியர் என்.கே.ராமசாமி கூறுகிறார். அப்போது மேய்ச்சலுக்கான இடங்களை நத்தம் என்று அழைத்தனர். இன்று கூட அரசு நிலங்களில் நத்தம் புறம்போக்கு, மந்தைப் புறம்போக்கு, வண்டிப்பாதை புறம்போக்கு போன்ற வகைகள் இருப்பது, அந்த வரலாற்றை நினைவு படுத்துகிறது. இந்நிலங்களில் தான் இன்றும் பட்டா கொடுக்கப்படுகிறது. கோவையிலிருந்து 25 கி.மீ., தொலைவில் இருந்த மேய்ச்சல் இடம் ஒன்று சாம்பல்களம் என்று அழைக்கப்பட்டது. மேய்ப்பர்கள் எரித்த சாணச் சாம்பலால் அந்தப் பெயர். அரசு பதிவுகளில் அது சர்க்கார் (அரசு) சாம்பல்களம் ஆனது. காலப்போக்கில் பெயர் மாறி சர்க்கார் சாமக்குளம், இறுதியில் எஸ்.எஸ்.குளம் என, மக்கள் வாழும் ஊராக மாறியது. மடை, பாடி, பள்ளி, கரை என முடியும் இடப்பெயர்கள், எல்லாம் பழைய மேய்ப்பர்கள் தங்கிய இடங்களாக இருந்திருக்கிறது. வெள்ளமடை, இடிகரை, மதுக்கரை போன்ற ஊர்கள் இன்றும் அந்த வாழ்வின் நிழலை சுமந்துகொண்டிருக்கின்றன.