| ADDED : நவ 24, 2025 06:13 AM
மேட்டுப்பாளையம்: சத்யசாய் பாபாவின் நுாறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ரத ஊர்வலம் நடந்தது. மேட்டுப்பாளையம் சத்யசாய் சேவா சமிதி சார்பில், சாய்பாபாவின் நூறாவது பிறந்த நாள் விழா, மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டன. முதல் நாள் காரமடை வித்யா விகாஸ் பள்ளியில் திருவிளக்கு பூஜை நடந்தது. இரண்டாம் நாள் ஆனந்தம் முதியோர் இல்லத்திலும், கல்லாறு அறிவொளி நகரிலும் பஜனையும், வஸ்திரதானம் வழங்கும் விழா நடந்தது. இரவில், கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் உள்ள சத்யசாய் சேவா சமிதியில் இருந்து ரத ஊர்வலம் துவங்கியது. மாவட்ட தலைவர் வெங்கடேச நாராயணன் தலைமை வகித்து, ரத ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சமிதியில் துவங்கி காலனியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக, ரத ஊர்வலம் சென்று மீண்டும் சமிதியை அடைந்தது. இதில் சமிதி கன்வீனர்கள், கோகுலம் குழந்தைகள், மாணவ, மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர். மூன்றாம் நாள் காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சங்கீர்த்தனம் ஆகியவை நடந்தன. சேஷகிரி ஆச்சார் ஹோமத்தை நடத்தி வைத்தார். அதைத் தொடர்ந்து வித்யா விகாஸ் பள்ளி மாணவிகளின் பஜனை நடந்தது. பின்பு மாலையில் சத்யசாய் பாபாவுக்கு அஷ்டோத்ரம், விஷ்ணு சகஸ்ரநாமம், பாராயணம் மற்றும் புஷ்பாஞ்சலி ஆகியவை அன்னபூரணி பேட்டை சமிதியில் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் டாக்டர் விஜய்கிரி, பூர்ணிமா ஆகியோர் பங்கேற்றனர். பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா ஆசிரியர் தத்தாத்ரேயன் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். இதை அடுத்து ஊஞ்சல் உற்சவமும், சாய் பஜனையும், மங்கள ஆரத்தியும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் சத்யசாய் சேவா சமிதிகளின் கன்வீனர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.