கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 9.25 கோடி மதிப்பில் துவக்கம்
பொள்ளாச்சி: தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் கழிவுநீர் கசடு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என மாநில அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில், வால்பாறை ரோடு, மயானத்திற்கு உட்பட்ட பகுதியில், 9.25 கோடி ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: நுாறு சதவீதம், துப்புரவுப் பணிகளை இலக்காகக் கொண்டும், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் பொதுச்சுகாதாரத்தை மேம்படுத்துதல் என்ற நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மோதிராபுரம் செல்லும் வழித்தடத்தில் தேக்கமடையும் நிலையில், அங்கிருந்து குழாய் வாயிலாக சுத்திகரிப்பு நிலையம் கொண்டுவரப்படும். ஈரநில முறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயற்கை முறையில் சுத்திகரிக்கப்படுகிறது. அங்கு, நாளொன்றுக்கு, 20 லட்சம் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கப்படும். சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் பாதுகாப்பாக வெளியேற்றப்படும். இவ்வாறு, கூறினர்.