கோவை ; கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் நேற்றிரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குச் சென்ற நான்கு மையங்களில், இரண்டு இடங்களில் டாக்டர்கள் பணியில் இல்லாததால், அதிர்ச்சி அடைந்தார். அவ்விருவரிடம் விளக்கம் கேட்க உத்தரவிட்ட அமைச்சர், நகர் நல மையம் செயல்படும் நேரத்தை அறிவிப்பு பலகையாக அனைத்து மையங்களிலும் உடனடியாக வைக்க, மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டார்.கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ், 32 நகர்ப்புற சுகாதார மையங்கள் உள்ளன. காலை, 8:00 முதல் மதியம், 12:00 மணி வரை; மாலை, 4:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை இம்மையங்கள் செயல்பட வேண்டும். இதில், மாலை நேரங்களில் டாக்டர்கள் இருப்பதில்லை என்கிற புகார் பரவலாக வருகிறது.இச்சூழலில், நேற்று கோவை வந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன், திடீரென ஆய்வுக்கு புறப்பட்டார். கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, நகர் நல அலுவலர் மோகன், உதவி நகர் அலுவலர் பூபதி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை அழைத்துக் கொண்டு, ஒவ்வொரு மையமாக செல்ல ஆரம்பித்தார்.முதலில், புலியகுளத்தில் உள்ள மையத்துக்குச் சென்றார். மருந்து, மாத்திரை இருப்பு விபரங்களை கேட்டறிந்த அவர், நாளொன்றுக்கு எத்தனை பேர் சிகிச்சை பெற வருகின்றனர். பணியிடங்கள் காலியாக இருக்கிறதா; மையங்களில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என விசாரித்தார். 'மாநகராட்சி மூலம் நடத்தப்படும் மையங்களில் அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துங்கள்' என, சுகாதாரப் பிரிவு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.பின், உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள மையத்துக்குச் சென்றபோது, அமைச்சருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அம்மையத்தில் டாக்டர் பணியில் இல்லை; வருகைப்பதிவேட்டை ஆய்வு செய்தார். சுகாதாரப் பிரிவு அதிகாரிகள், டாக்டரை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அவரிடம் விளக்கம் கேட்கவும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் சுப்ரமணியன் உத்தரவிட்டார்.மூன்றாவதாக, தெற்கு மண்டல அலுவலகத்துக்கு அருகில் உள்ள இடையர்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்துக்குச் சென்றார். அங்கும் டாக்டர் பணியில் இல்லை. அதையடுத்து, 'மையம் எத்தனை மணி நேரம் செயல்பட வேண்டும்' என்கிற கேள்வியை, அமைச்சர் முன்வைத்தார்.'தினமும் காலை, 8:00 முதல் மதியம், 12:00 மணி வரை; மாலை, 4:00 முதல் இரவு, 8:00 மணி வரை செயல்பட வேண்டும்' என, அதிகாரிகள் பதிலளித்தனர்.இவ்விபரங்களை அறிவிப்பு பலகையாக எழுதி, அனைத்து மையங்களிலும் முகப்பில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் உடனடியாக வைக்க வேண்டும் என, மாநகராட்சி கமிஷனருக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.இதன்பின், கோவைப்புதுாரில் உள்ள மையத்தை ஆய்வு செய்து விட்டு, ரேஸ்கோர்ஸில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்றார். இரு மையங்களில் டாக்டர்கள் பணியில் இல்லாதது தொடர்பாக விளக்கம் கேட்கவும், துறை ரீதியாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கவும், கலெக்டருக்கும், மாநகராட்சி கமிஷனருக்கும் அமைச்சர் உத்தரவிட்டார். உறவினர் ஒருவர் இறப்புக்கு ஒரு டாக்டர் சென்றிருந்ததாகவும், இன்னொரு டாக்டர் தனது மகளுக்கு உடல் நலம் குன்றியிருப்பதாக தகவல் வந்ததால் புறப்பட்டுச் சென்றதாகவும் தெரிவித்ததாக, அமைச்சரிடம் அதிகாரிகள் பதிலளித்தனர். அமைச்சரின் திடீர் ஆய்வு, அரசு மருத்துவமனை டாக்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.